8 மாவட்டங்களை ஏமாற்றி வரும் பருவமழை ; வறட்சியால் மக்கள் அவதி

மராட்டியத்தில் பல பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்பட்ட நிலையில் மரத்வாடா மண்டலத்தில் உள்ள 8 மாவட்ட மக்களை பருவமழை ஏமாற்றி வருகிறது. அங்கு வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2019-08-17 23:57 GMT
மும்பை, 

மராட்டியத்தில் பெரும்பாலான பகுதிகளில் இந்த ஆண்டு மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக மேற்கு மராட்டிய பகுதிகளில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல பகுதிகள் மூழ்கின. 50-க்கும் மேற்பட்டோர் மழை வெள்ளத்துக்கு உயிரிழந்தனர்.

அதே சமயத்தில் மரத்வாடா மண்டலத்தில் வறட்சி நீடிக்கிறது. லேசாக தலை காட்ட தொடங்கிய மழை பின்னர் தலைமறைவாகி விட்டது. பருவமழை பொய்த்து வருவதால் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு நீரின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இந்திய வானிலை ஆய்வு மைய தகவலின்படி மரத்வாடா மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் பருவமழை காலத்தில் 77.9 செ.மீ. மழை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சராசரியான இந்த மாவட்டங்களில் வெறும் 29.9 செ.மீட்டர் மழை மட்டுமே பொழிந்துள்ளது.

பீட், லாத்தூர், உஸ்மனாபாத், ஜல்னா மற்றும் பர்பானி மாவட்டங்களில் கடந்த இரண்டரை மாதத்தில் குறைந்த அளவு மழையே பெய்துள்ளது. அதே நேரத்தில் அவுரங்காபாத், நாந்தெட் மற்றும் ஹிங்கோலி மாவட்டங்களில் நிலைமை சற்று ஆறுதலாக உள்ளது.

பீட் மாவட்டத்தில் கடும் வறட்சி தொடர்ந்து நிலவுகிறது. மரத்வாடா மண்டலத்திலேயே இந்த மாவட்டத்தில் குறைந்தபட்டமாக 16 செ.மீ. மழை பொழிந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் சுமார் 700 டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்