புதுக்கோட்டை மாவட்டத்தில் மொய் விருந்துகள் முடிந்தது கஜா புயல் பாதிப்பால் வசூல் குறைவாக இருந்தது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக திருவிழா கோலம் பூண்டிருந்த மொய்விருந்துகள் ஆடி மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால் கஜா புயல் பாதிப்பால் எதிர்பார்த்த அளவு மொய் வசூல் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர்.

Update: 2019-08-17 22:30 GMT
கீரமங்கலம்,

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியில் தொடங்கிய மொய் விருந்து கலாசாரம் கொஞ்சம் கொஞ்சமாக பரவி புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், குளமங்கலம் என்று சுற்றியுள்ள சுமார் 100 கிராமங்களில் பரவி உள்ளது. சமீபகாலமாக ஆலங்குடி, அறந்தாங்கி பகுதியில் மொய் விருந்து கலாசாரம் பரவ தொடங்கியுள்ளது. தொடக்கத்தில் தனி நபராக மொய் விருந்து நடத்தியவர்கள் சாப்பாடு, பத்திரிக்கை உள்ளிட்ட செலவினங்களை குறைக்க பலர் கூட்டாக இணைந்து ஒரே விருந்து கொடுத்து மொய் வசூல் செய்து வருகின்றனர். தற்போது குறைந்தது 10 நபர்களும், அதிகபட்சமாக 40 நபர்கள் வரையும் இணைந்து ஒரே பந்தலில் மொய்விருந்துகளை நடத்தி வருகின்றனர்.

2 மாதங்களும் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் சுற்றியுள்ள செரியலூர், பனங்குளம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி உள்ளிட்ட பல கிராமங்களில் ஆனி மாதம் முதல் மொய் விருந்துகள் தொடங்கி நடந்து வந்தது. ஆனால் கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், புள்ளாண்விடுதி உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களில் ஆடி மாதம் முதல் தேதியில் மொய் விருந்துகள் தொடங்கியது. இப்படி தொடர்ந்து 2 மாதங்கள் கீரமங்கலம், வடகாடு பகுதியில் மொய்விருந்துகள் நடந்தது திருவிழாக்கள் நடப்பது போல இருந்தது. இந்த 2 மாதத்தில் மட்டும் மொய் விருந்துக்காக சுமார் 30 ஆயிரம் கிலோ ஆட்டுக்கறி சமைக்கப்பட்டு விருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

புயல் பாதிப்பால் மொய் வசூல் குறைந்தது

கடந்த ஆண்டு வரை மொய் வசூல் அமோகமாக இருந்தது. அதாவது மொய் விருந்து பருவ காலத்தில் சராசரியாக அதிகபட்சம் ரூ.500 கோடிக்கு மேல் மொய் வசூல் வந்தது. பலரும் மொய் உறவுகளை தொடர்ந்தனர். ஆனால் இந்த ஆண்டு மொய் வசூல் அதிகமாக குறைந்து மொய் உறவுகளும் குறைந்துள்ளது. அதாவது கஜா புயலின் தாக்கமே மொய் குறைவுக்கு காரணம் என்கிறார்கள்.

இதுகுறித்து மொய் விருந்து நடத்தியவர்கள் கூறுகையில், மொய் விருந்துகள் நடக்கும் பகுதி அனைத்தும் விவசாயம் சார்ந்த பகுதிகள். இதனால் விவசாயத்தை நம்பியே மொய் வரவு செலவுகள் வைத்திருந்தனர். ஆனால் கடந்த ஆண்டு கடுமையாக வீசிய கஜா புயலின் தாக்கம் ஒட்டுமொத்த விவசாயத்தையும் அழித்துவிட்டது. தென்னை, வாழை, மா, பலா, மலர்கள் என்று அத்தனை விவசாயமும் முற்றிலும் அழிந்ததால் விவசாயிகளுக்கு வருமானம் இல்லை. இதனால் இந்த ஆண்டு மொய் வசூல் மிகவும் குறைந்துள்ளது. மேலும் பலர் பணம் பற்றாக்குறையால் மொய் உறவை தொடர முடியாமல் போட்ட மொய்யை மட்டுமே திரும்ப செலுத்தி மொய் உறவை துண்டித்து சென்று விட்டனர். பல பெரிய மொய் வாங்கியவர்கள் மொய் செய்ய முடியாமல் முடங்கிவிட்டனர். இதனால் இந்த ஆண்டு அதிகபட்சமாக ரூ. 300 கோடிக்குள் மட்டுமே மொய் வசூல் கிடைத்துள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்