மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நிவாரண பொருட்களை தலையில் சுமந்து செல்லும் தாசில்தார்-பாராட்டுகள் குவிகிறது
பெல்தங்கடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நிவாரண பொருட்களை தாசில்தார் தலையில் சுமந்து செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிகிறது.
மங்களூரு,
இந்த தொடர் கனமழையால் பெல்தங்கடி தாலுகாவில் பஞ்சாருமலே கிராமம் வெள்ளத்தில் தத்தளித்தது. மழை வெள்ளத்தால் அந்த கிராமத்தை இணைக்கும் பாலம் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த கிராமம் ஒரு தீவு போல காட்சி அளித்தது. அந்த கிராமத்தில் சுமார் 46 குடும்பங்கள் வசித்து வருகிறது. இதனால் அந்த மக்கள், உணவு பொருட்கள் எதுவும் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.
நிவாரண பொருட்களை தலையில் சுமந்து சென்ற தாசில்தார்
இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தாலுகா நிர்வாகம் சார்பில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, பஞ்சாருமலே கிராமத்தில் சாலை துண்டிக்கப்பட்டதால் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், பெல்தங்கடி தாசில்தார் கணபதி சாஸ்திரி, நிவாரண பணிகளை பார்வையிட சென்றார். அப்போது அந்த கிராமத்துக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டதை அறிந்த அவர், அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் தாலுகா ஊழியர்களுடன் சேர்ந்து தற்காலிக பாலம் அமைக்க முடிவு செய்தார்.
அதன்படி அந்தப்பகுதியில் கம்புகளால் ஆன தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. இதையடுத்து அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட 16 நிவாரண பொருட்கள் அந்த கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, தாலுகா ஊழியர்களுடன் சேர்ந்து தாசில்தார் கணபதி சாஸ்திரியும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை தனது தலையில் சுமந்துக்கொண்டு பாலத்தை கடந்து அந்த கிராமத்துக்கு சென்றார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஊழியர்களுடன் சேர்ந்து தாசில்தார் நிவாரண பொருட்களை தலையில் சுமந்து சென்றது அந்தப்பகுதி மக்களையும், ஊழியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆபத்தான பகுதிகளில் சிக்கியிருந்தவர்களை தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டார்.
மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, வாக்குச்சாவடி ஊழியர்களுடன் சேர்ந்து கணபதி சாஸ்திரியும் வாக்குப்பதிவு எந்திரங்களை தலையில் சுமந்துக் கொண்டு வாக்குச்சாவடிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாசில்தார் கணபதி சாஸ்திரி, நிவாரண பொருட்களை தலையில் சுமந்து சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சாதாரண ஊழியர்களே நிவாரண பொருட்களை தூக்கி செல்ல யோசிக்கும் போது, தாசில்தார் ஒருவர் மக்களுக்காக நிவாரண பணிகளில் நேரடியாக களமிறங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.