சடையநேரி கால்வாயில் தடுப்பு சுவர் கட்ட எதிர்ப்பு: மெஞ்ஞானபுரத்தில் கடையடைப்பு

சடையநேரி கால்வாயில் தடுப்பு சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மெஞ்ஞானபுரத்தில் கடையடைப்பு நடந்தது.

Update: 2019-08-16 21:45 GMT
மெஞ்ஞானபுரம், 

தூத்துக்குடி மாவட்டம் மருதூர் அணையின் மேலக்கால் மூலம் சடையநேரி, புத்தன்தருவை உள்ளிட்ட குளங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த குளங்களுக்கு தண்ணீர் வரும் சடையநேரி கால்வாயானது மெஞ்ஞானபுரம் அருகே ராமசுப்பிரமணியபுரத்தில் இரண்டாக பிரிந்து, ஒரு கால்வாய் சடையநேரி குளத்துக்கும், மற்றொரு கால்வாய் புத்தன்தருவை குளத்துக்கும் செல்கிறது. அங்கு சடையநேரி குளத்துக்கு 2 ஷட்டர்கள் மூலமும், புத்தன்தருவை குளத்துக்கு 4 ஷட்டர்கள் மூலமும் தண்ணீர் செல்லும் வகையில் அமைக் கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் புத்தன்தருவை குளத்துக்கு கூடுதலாக தண்ணீர் செல்லும் வகையில், ராமசுப்பிரமணியபுரத்தில் சடையநேரி கால்வாயின் குறுக்கே ரூ.20 லட்சம் செலவில் பிரிவினை தடுப்பு சுவர் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை நடந்தபோது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பிரிவினை தடுப்பு சுவர் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் சடையநேரி கால்வாயின் குறுக்கே பிரிவினை தடுப்பு சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மெஞ்ஞானபுரத்தில் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் ஓட்டல்கள், டீக்கடைகள், மருந்து கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்படவில்லை. வாடகை கார், வேன், ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும் கோரிக்கையை வலியுறுத்தி, மெஞ்ஞானபுரம் பஜாரில் மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. செல்லத்துரை, சடையநேரி கால்வாய் பாசன விவசாயிகள் சங்க தலைவர் ஆதிலிங்கம், முன்னாள் யூனியன் தலைவர் தாமோதரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாலசிங், வியாபாரிகள் சங்க தலைவர்கள் ரவி (உடன்குடி), ராஜ பிரபு (மெஞ்ஞானபுரம்) உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

சடையநேரி கால்வாயில் பிரிவினை தடுப்பு சுவர் அமைக்கும் பணியை கைவிடும் வரையிலும், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக வியாபாரிகள், விவசாயிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்