வங்கியில் இருந்து பேசுவதாக கூறி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ. 30 ஆயிரம் மோசடி
வங்கியில் இருந்து பேசுவதாக கூறி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ. 30 ஆயிரம் மோசடி செய்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி,
திருச்செந்தூர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் பாபுராஜ். இவர் திருச்செந்தூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் செல்போன் எண்ணிற்கு கடந்த மாதம் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், இந்தி கலந்து தமிழில் பேசியுள்ளார். அவர் தான் திருச்செந்தூரில் உள்ள ஒரு வங்கியின் மேலாளர் என்றும், உங்கள் ஏ.டி.எம். கார்டின் மேல் குறிப்பிட்டுள்ள எண்களை தெரிவியுங்கள் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய அவரும் அந்த எண்களை கூறியுள்ளார். பின்னர் உங்கள் செல்போனிற்கு வந்த ஓ.டி.பி. (ஒரு முறை மட்டும் வரும் ரகசிய எண்) எண்ணை கேட்டு உள்ளார். இதுபோல் அந்த நபர் 3 முறை ஓ.டி.பி. எண்ணை கேட்டு பெற்று கொண்டார். அதன் பின்னர் பாபுராஜ் எண்ணிற்கு எந்த அழைப்பும் வரவில்லை.
பாபுராஜ், சில நாட்களுக்கு முன்பு வங்கி கணக்கை சரிசெய்த போது அதில் ரூ.30 ஆயிரம் எடுக்கப்பட்டு இருப்பதும், அந்த பணம் ரூ.10 ஆயிரமாக 3 முறை எடுக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பாபுராஜ், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.