வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும், இடைத்தரகரை கத்திமுனையில் கடத்திய பெண் உள்பட 6 பேர் கைது
வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் இடைத்தரகரை கத்திமுனையில் மிரட்டி கடத்திய பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கணபதி,
கோவையை அடுத்த கணபதி பாலாஜி லே-அவுட்டை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 65). இவர், வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் இடைத்தரகராக செயல்பட்டு வந்தார். இவரிடம் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட சிவானந்தா காலனியை சேர்ந்த ஆதிகணேசன் (44) என்பவர் ரூ.5 கோடி மதிப்பில் ஒரு தோட்டம் விற்பனைக்கு உள்ளது. அதை குறைந்த விலைக்கு வாங்கலாம். இதற்காக தஞ்சாவூரை அடுத்த கரந்தை என்ற ஊரைச்சேர்ந்த சத்யா (27) என்ற பெண்ணை தொடர்பு கொள்ளுமாறு கூறி, செல்போன் எண்ணை கொடுத்தார்.
அந்த எண்ணுக்கு குணசேகரன் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சத்யா, நேரில் வீட்டுக்கு வந்து பேசுவதாக கூறினார். அதன்படி அவர் கடந்த 13-ந் தேதி குணசேகரனை சந்திக்க வீட்டுக்கு வந்து தோட்டத்தை காட்டுவதாக கூறினார். உடனே குணசேகரன் தனது நண்பர் ஜான்சன், டிரைவர் ரகுபதி ஆகியோருடன் காரில் புறப்பட்டு சென்றார்.
விநாயகபுரம் அருகே சென்ற போது, கணபதியை சேர்ந்த ஜெயக்குமார் (65), கண்ணன், அனு உள்பட மேலும் சிலர் காரில் ஏறிக்கொண்டனர். பின்னர் இந்த கும்பல் கத்திமுனையில் குணசேகரன், ஜான்சன், ரகுபதி ஆகியோரை மிரட்டியது. இதையடுத்து திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான குடோனுக்கு கொண்டு சென்று அடைத்து வைத்தனர். மேலும் அவர்களை கட்டிப்போட்டு வாயில் துணியை திணித்தனர்.
பின்னர் அவரிடம் ரூ.5 லட்சம் பணம் வேண்டும் என்று கத்திமுனையில் கடத்தல் ஆசாமிகள் மிரட்டினர். அதற்கு குணசேகரன் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் அவர்களை அடித்து உதைத்தது. வலி தாங்கமுடியாமல் தவித்த குணசேகரன் தனது மகனுக்கு போன் செய்து, சத்யாவின் வங்கி கணக்கிற்கு ரூ.60 ஆயிரத்தை போட ஏற்பாடு செய்தார். பின்னர், குணசேகரன் அணிந்திருந்த தங்கமோதிரம், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பறித்தனர்.
அப்போது ரூ.8 லட்சம் தராவிட்டால் கொலை செய்து விடுவதாக குணசேகரனை கடத்தல் கும்பலை சேர்ந்த ஜெயக்குமார் மிரட்டியுள்ளார். அதேபோல் கண்ணனும், ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டினார். மேலும் குணசேகரனிடம் இருந்த காசோலையில் மிரட்டி கையெழுத்து வாங்கியுள்ளனர். பின்னர் கடத்தல் ஆசாமிகள் மது குடித்து விட்டு போதையில் படுத்து விட்டனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு குணசேகரன், ஜான்சன், ரகுபதி ஆகியோர் தப்பிச்சென்றனர். இது குறித்து குணசேகரன், சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து கடத்தல் கும்பலை சேர்ந்த கோவை சிவானந்த காலனியை சேர்ந்த ஆதிகணேசன்(44), கணபதியை சேர்ந்த ஜெயக்குமார்(52), தஞ்சாவூர் கரந்தையை சேர்ந்த சத்யா(27), உடுமலை அம்மாபட்டியை சேர்ந்த முத்துபாண்டி(38), செந்தில்குமார்(41), கோவிந்தராஜ்(50) ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடத்தலில் தொடர்புடைய கண்ணன், அனு உள்பட மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.