மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட, காவிரி நீர் திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்து சேர்ந்தது - நெல் மற்றும் மலர்களை தூவி வரவேற்பு
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்து சேர்ந்தது. நெல் மற்றும் மலர்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜீயபுரம்,
தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பின. இதன் காரணமாக கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து உபரி காவிரி நீர் திறந்துவிடப்பட்டது. கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மள, மளவென உயர்ந்தது.
49 அடியில் இருந்த நீர்மட்டம் 90 அடியை தாண்டியதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 13-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீரை திறந்து விட்டார். இதனால் டெல்டா பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களை கடந்து நேற்று முன்தினம் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை அடைந்தது. திருச்சி மாவட்ட எல்லையான பெட்டவாய்த்தலை பகுதிக்கு நேற்று காலை 7 மணி அளவில் வந்தது. அங்கிருந்து சிறுகமணி, பெருகமணி, திருப்பராய்த்துறை வழியாக திருச்சி முக்கொம்பு மேலணைக்கு நேற்று நண்பகல் 12 மணி அளவில் வந்தடைந்தது.முக்கொம்பு மேலணைக்கு காவிரி நீர் வந்து சேர்ந்ததை பொதுப்பணித்துறை நீர்ப்பாசன மேலாண்மை கழக உதவி தலைவர் இளங்கோவன் உறுதி செய்தார். அதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் மேலணையில் உள்ள மோட்டார்களுக்கும் பூஜைகள் செய்யப்பட்டு நெல் மற்றும் மலர்கள் தூவிவரவேற்பு அளிக்கப் பட்டது. இதனை தொடர்ந்து 12.30 மணியளவில் மேலணையில் உள்ள பொத்தானை அழுத்தி இளங்கோவன் தண்ணீரை திறந்து விட்டார். காவிரி மேலணையில் உள்ள 41 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறி சென்றது.