விவசாய கிணற்றில் இருந்து தண்ணீரை விற்க கூடாது; தனிநபர் விசாரணை குழுவிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

விவசாய கிணற்றில் இருந்து தண்ணீரை விற்க கூடாது என்று தனிநபர் விசாரணை குழுவிடம் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

Update: 2019-08-11 23:30 GMT
மடத்துக்குளம்,

மடத்துக்குளம் அருகே உள்ள சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளன. இதில் கணியூர்-கடத்தூர் சாலையில் உள்ள சில விவசாயிகள் கிணற்று நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தாமல் அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஜோத்தம்பட்டியில் உள்ள பல்வேறு கோழிப்பண்ணைகளுக்கு சாலையோரம் குழாய்கள் பதித்து விற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அருகில் உள்ள மற்ற விவசாய கிணறுகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர். விவசாய கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்து கோழிப்பண்ணைகளுக்கு விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்று ஜோத்தம்பட்டி ஊராட்சியில் வசிக்கும் செந்தில்குமார் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தனிநபர் விசாரணை குழுவை அமைத்தது.

இதை தொடர்ந்து தனிநபர் விசாரணை குழு ஆணையர் சுபாங்கணிநாயர் நேற்று சம்பந்தப்பட்ட கிணற்றில் இருந்து கணியூர், மைவாடி, ஜோத்தம்பட்டி, வெங்கிட்டாபுரம் போன்ற பல்வேறு இடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் இடங்களை ஆய்வு செய்தார். அப்போது மடத்துக்குளம் தாசில்தார் பழனியம்மாள், துணை தாசில்தார் அருள்குமார், நில வருவாய் ஆய்வாளர் வினோத்குமார்,கிராம நிர்வாக அலுவலர்கள் கணபதி சுந்தரம், ரேவதி, சித்ரா தேவி, சக்திவேல், மற்றும் வழக்கு தொடுத்துள்ள செந்தில்குமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தனிநபர் விசாரணை குழு ஆணையர் சுபாங்கணிநாயரிடம், விவசாயிகள், ஜோத்தம்பட்டி பகுதியில் உள்ள தனிநபர்கள் விவசாய கிணற்றில் இருந்து தண்ணீரை விலைக்கு விற்பதால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாய கிணறுகளில் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் பயிர் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீரை விற்க கூடாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த ஆய்வு இன்றும் தொடர்ந்து நடைபெறும் என தெரிகிறது.

மேலும் செய்திகள்