வாகன ஓட்டுனர்களிடம் ஆன்லைன் மூலம் அபராதம் வசூலிக்கும் முறை; போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

வாகன சோதனையின்போது விதிமீறும் வாகன ஓட்டுனர்களிடம் ஆன்லைன் மூலம் அபராதம் வசூலிக்கும் முறையை ராமநாதபுரத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா தொடங்கி வைத்தார்.

Update: 2019-08-11 22:45 GMT
ராமநாதபுரம்,

தமிழ்நாடு முழுவதும் வாகன விபத்துகளை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் பல்வேறு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்து களை தவிர்க்கும் வகையிலும், சாலை விதிகளை கடைப்பிடிக்க வலியுறுத்தியும் தினமும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு வாகன சோதனை மேற்கொள்ளும்போது விதிகளை மீறிபவர்களுக்கு அபராத தொகை விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகையை போலீசார் வசூலிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் வாகன சோதனை மேற்கொள்ளும் போலீசார் நேரடியாக பணம் பெறாமல் இ-சலான் முறையில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பேடிஎம் மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தினை ராமநாதபுரத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா தொடங்கி வைத்து போலீசாருக்கு இ-சலான் எந்திரங்களை வழங்கினார். நிகழ்ச்சியின்போது வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்தவர்கள், விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இ-சலான் முறையில் ஆன்லைன் மூலம் அபராத தொகை வசூலிக்கப்பட்டு அந்த இடத்திலேயே அதற்கான ரசீது வழங்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா கூறியதாவது:- வாகன சோதனையின்போது அபராத தொகையை ஆன்லைன் மூலம் வசூலிப்பதற்காக 4ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த இ-சலான் எனப்படும் எந்திரம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 13 எண்ணிக்கையில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த எந்திரத்தில் விதிகளை கடைபிடிக்காத, உரிய ஆவணங்கள் இல்லாத வாகன ஓட்டிகளின் வாகன எண்ணை பதிவு செய்ததும் உரிமையாளரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும். இதற்கேற்ப வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சாரதி வாகன் மென்பொருள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எந்த விதிமீறலோ அதற்காக நிர்ணயிக்கப்பட்ட தொகையை வங்கி கார்டுகள் மூலம் பெற்று அதற்கான ரசீது வழங்கப்படும். இதற்காக இந்த எந்திரத்தில் வாகனங்களின் விவரங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் இதற்கு முன்னர் இதுபோன்று விதிமீறல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அதுவும் தெரிந்துவிடும்.

இதன்மூலம் அதிகமுறை விதிகளை மீறியவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய தானாகவே வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை சென்றுவிடும். இதன் காரணமாக வாகனங்கள் பறிமுதல் செய்ய வழிவகை ஏற்படும். இந்த எந்திரத்தில் அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். வருங்காலங்களில் விவரங்களையும் இதன்மூலம் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு கூறினார். நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் தனபாலன், பிரபு, சுந்தரம்பாள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமநாதன், ஜெயக்குமார், திபாகர்சான், சிவசாமி, சரவணக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்