நடுவீரப்பட்டு அருகே, குளம் ஆக்கிரமிப்பை அகற்ற திரண்டு சென்ற கிராம மக்கள் - போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

நடுவீரப்பட்டு அருகே குளம் ஆக்கிரமிப்பை அகற்ற கிராம மக்கள் திரண்டு சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-08-11 22:45 GMT
நெல்லிக்குப்பம்,

நடுவீரப்பட்டு அருகே சிங்கிரிகுடி பகுதியில் வெள்ளகுளம் உள்ளது. இந்த குளத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து, கம்பி வேலி அமைத்து இருந்தார். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை மீட்டுத்தரக்கோரி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க முன்வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பிரச்சினைக்குரிய குளத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை தாமே அகற்றி, குளத்தை மீட்பது என்று முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை அவர்கள் ஒன்று திரண்டு குளத்திற்கு சென்றனர். இதுபற்றிய தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கார்த்திகேயன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். அவர்கள் கிராம மக்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிராம மக்கள், தனிநபரின் ஆக்கிரமிப்பில் சிக்கி இருக்கும் குளத்தை மீட்டு தரக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தோம். ஆனால் அவர்களோ தனி நபருக்கு சாதாகமாக தான் செயல்படுகிறார்கள். எனவே ஆக்கிரமிப்புகளை நாங்களே அகற்றிக்கொள்கிறோம் என்று தெரிவித்தனர். ஆனால் அவர்களை போலீசார் தொடர்ந்து தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், இதுகுறித்து தாலுகா அலுவலகத்தில் மனு அளிக்குமாறும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் உறுதியளித்தனர். இதையேற்று அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்