கொடைக்கானல் அருகே, சாலையில் சாய்ந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் அருகே சாலையில் சாய்ந்த மரத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-08-10 22:15 GMT
கொடைக்கானல்,

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்றும் காலை முதலே அவ்வப்போது பலத்த காற்று வீசியது. இதனால் கொடைக்கானல் நகரில் இருந்து வில்பட்டி கிராமத்துக்கு செல்லும் சாலையில் வெட்டுவரை என்ற இடத்தில் சாலையின் குறுக்கே மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. மேலும் மரம் விழுந்ததில் அங்குள்ள மின்கம்பிகள் அறுந்து விழுந்ததுடன், மின்கம்பங்கள் முறிந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், தீயணைப்பு துறையினர், மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலையின் குறுக்காக விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அத்துடன் முறிந்து விழுந்த மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் கொடைக்கானல்-வத்தலக் குண்டு சாலையில் டைகர் சோலை என்ற பகுதியில் மரம் சாய்ந்து விழுந்ததில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் கொடைக் கானல் நகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. மின்கம்பிகள் மீது இந்த மரங்கள் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மின்வாரிய செயற்பொறியாளர் மேத்யூ தலைமையில் ஊழியர்கள் விரைந்து சென்று மின் கம்பிகளை மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்று காலை மழை பெய்யாத நிலையில் மாலை நேரத்தில் லேசான சாரல் மழை பெய்தது.

மேலும் செய்திகள்