திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரி; 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரியால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-08-10 22:15 GMT
தாளவாடி,

சத்தியமங்கலத்தை அடுத்து உள்ளது திம்பம் மலைப்பாதை. 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதையானது திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. எனவே இந்த மலைப்பாதை வழியாக ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. அவ்வாறு செல்லும் வாகனங்களில் கனரக வாகனங்கள் திம்பம் மலைப்பாதையில் உள்ள குறுகலான கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் நிற்பதும், பழுதாகி நிற்பதும், கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

இதன்காரணமாக திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இந்த நிகழ்வுகளை தடுக்க முடியாமல் திணறி வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவை நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று திம்பம் மலைப்பாதை வழியாக நேற்று வந்து கொண்டிருந்தது. காலை 7 மணி அளவில் அங்குள்ள 9-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முடியாமல் அப்படியே நின்றுவிட்டது. மேலும் அந்த லாரியின் பின்புறம் ரோட்டில் தட்டி நின்றது. இதனால் அந்த லாரியை முன்னோக்கியும், பின்னோக்கியும் இயக்க முடியாமல் அதன் டிரைவர் மிகவும் அவதிப்பட்டார். இதனால் திம்பம் மலைப்பாதையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுபற்றி அறிந்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக பண்ணாரியில் இருந்து பெரிய கிரேன் வரவழைக்கப்பட்டது. பின்னர் கிரேன் மூலம் பகல் 11 மணி அளவில் கன்டெய்னர் லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து வாகன போக்குவரத்து தொடங்கியது. 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் திம்பம் மலைப்பாதை வழியாக பஸ் பயணிகள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

மேலும் செய்திகள்