தேனி மாவட்டத்தில் வெளுத்தும் வாங்கும் மழை, போடிமெட்டு மலைப்பாதையில் உருண்டு விழுந்த பாறைகள்

தேனி மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்குவதால் போடிமெட்டு மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-08-09 22:30 GMT
போடி,

தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன்காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. போடிமெட்டு மலைப்பாதையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பாதையில் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு வருகிறது.

நேற்று அதிகாலை போடிமெட்டு மலைப்பாதையில் எஸ்.வளைவுக்கு மேல் பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போடி நகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஷாஜகான் மற்றும் போலீசாரும், நெடுஞ்சாலைத்துறையினரும் அங்கு சென்று மலைப்பாதையில் கிடந்த பாறைகளை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் மலைப்பாதையில் உள்ள மூங்கில் மரங்களும் சாய்ந்து விழுந்தன.

இந்தநிலையில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், போடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் மற்றும் போலீசார் போடி முந்தல், குரங்கணி ஆகிய மலை கிராமங்களில் ஆய்வு செய்தனர். தொடர் மழை பெய்வதால் மலை கிராம மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், பாதுகாப்பான பகுதிகளில் தூங்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை வழங்கினார்.

சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ் மலைப்பாதையில் 6-வது கொண்டை ஊசி வளைவில் ராட்சத மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் 2-வது நாளாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. போடி-முந்தல் சாலையில் பிள்ளையார் தடுப்பணையில் தண்ணீர் அதிகளவு கொட்டுவதால் அங்கும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பணையில் நீரின் அளவை மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி பார்வையிட்டார். மேலும் அவர், குரங்கணி மலைப்பாதையில் உள்ள பிச்சாங்கரை, முந்தலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளையும் பார்வையிட்டார்.

தொடர் மழை காரணமாக வைகை, கொட்டக்குடி, சுருளி போன்ற ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதுதவிர முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அங்கிருந்து தேனி மாவட்டத்துக்கு வினாடிக்கு 1,100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. வைகை அணை நீர்மட்டம் படிப்படியாக உயரத்தொடங்கியுள்ளதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-அரண்மனைப்புதூர்-55.8, ஆண்டிப்பட்டி-29, போடி- 44.2, கூடலூர்-53, மஞ்சளாறு-21, பெரியகுளம்-29, சோத்துப்பாறை-37, உத்தமபாளையம்-57.1, வைகை அணை-27, வீரபாண்டி-61.

அதேபோல், தேக்கடி (235 மி.மீ), முல்லைப்பெரியாறு (200.6 மி.மீ) பகுதிகளிலும் பெய்த மழையளவையும் சேர்த்து மொத்தம் 849.7 மி.மீ (84.9 செ.மீ) மழையளவு பதிவாகி உள்ளது. இதன் சராசரி மழைப் பொழிவு 70.8 மி.மீ. ஆகும். 

மேலும் செய்திகள்