ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ராஜீவ் ஜோதி மதநல்லிணக்க யாத்திரை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடங்கி வைத்தார்

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ராஜீவ் ஜோதி மதநல்லிணக்க யாத்திரையை முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடங்கிவைத்தார்.

Update: 2019-08-09 22:30 GMT
ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவிடம் உள்ளது. இங்கு இருந்து டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தியின் சமாதி உள்ள வீர்பூமிக்கு ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் ராஜீவ் ஜோதி மதநல்லிணக்க யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான ராஜீவ் ஜோதி மதநல்லிணக்க யாத்திரை நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்க தலைவர் பிரகாசம் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்துகொண்டு ஜோதியை ஏற்றிவைத்து யாத்திரையை தொடங்கிவைத்தார்.

இதில் ராஜீவ்காந்தி நினைவிட சீரமைப்பு குழு உறுப்பினர் முருகானந்தம், காஞ்சீ புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ரூபி.மனோகரன், ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கட்சித்தலைவர் அருள்ராஜ், மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. தலைவர் அய்யப்பன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர். பல்வேறு மாநிலங்கள் வழியாக செல்லும் இந்த ஜோதி யாத்திரை வருகிற 19-ந் தேதி ராகுல்காந்தி, முன்னாள் தலைவர் சோனியாகாந்தி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

20-ந் தேதி ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது.

மேலும் செய்திகள்