அமைச்சரவை மோதல் விவகாரம்: புதுவை மேலிட தலைவரின் முன்னிலையில் சமரச முயற்சி

புதுவை அமைச்சரவை மோதல் விவகாரம் தொடர்பாக மேலிட தலைவர் சஞ்சய்தத் முன்னிலையில் சமரச முயற்சி தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்துகொண்டனர்.

Update: 2019-08-09 00:11 GMT
புதுச்சேரி,

புதுவை அமைச்சரவையில் மோதல் வெடித்துள்ளது. இதற்கிடையே கடந்த சில தினங்கள் முன்பு முதல்-அமைச்சர் நாராயணசாமியும், அமைச்சர் நமச்சிவாயமும் திடீரென டெல்லி சென்றனர். அங்கு கட்சி மேலிட தலைவர்களை முதல்-அமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசியபோது நமச்சிவாயம் குறித்து புகார்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், பொதுப் பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் காங்கிரஸ் மேலிட தலைவர்களான சஞ்சய்தத், முகுல்வாஸ்னிக் ஆகியோரை சந்தித்து விளக்கம் அளித்ததாக தெரிகிறது. பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் புதுவை திரும்பினர்.

இந்த நிலையில் அமைச்சரவையில் உள்ள மோதல் விவகாரம் தொடர்பாக சமரச முயற்சி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் தனியார் ஓட்டலில் நேற்று இரவு நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் மேலிட தலைவரும், புதுவை மாநில பொறுப்பாளருமான சஞ்சய் தத் கலந்துகொண்டார். கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கமலக்கண்ணன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், எம்.என்.ஆர்.பாலன், தீப்பாய்ந்தான், ஜெயமூர்த்தி, விஜயவேணி, புதுவை அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், முன்னாள் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் உள்பட கட்சி முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இதில் அமைச்சரவையில் உள்ள மோதல் பிரச்சினை தொடர்பாக சமரச முயற்சி நடந்தது. இந்த கூட்டம் நேற்று நள்ளிரவு வரை நீடித்தது.

மேலும் செய்திகள்