ஆள் கடத்தல் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் - மாவட்ட முதன்மை நீதிபதி பங்கேற்பு
கடலூரில் ஆள் கடத்தல் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி பங்கேற்றார்.
கடலூர்,
ஆள் கடத்தல் மற்றும் கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பதற்காக மாவட்ட அளவில் தனிக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் வக்கீல்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகள் என பல்வேறு துறையினர் இணைந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆள் கடத்தல் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. முகாமுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி தலைமை தாங்கி, இந்த புதிய குழுவை அறிமுகம் செய்து வைத்து பேசுகையில், கொத்தடிமை ஒழிப்பில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. இருப்பினும் இது போன்ற குழு அமைத்தது, இன்னும் விரைவான செயல்பாடுகளுக்கு உதவும். கடலூர் மாவட்டத்தில் ஆள் கடத்தல் இல்லா மாவட்டமாக மாற்றுவோம் என்றார்.
இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஜோதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், சப்-கலெக்டர்கள் சரயூ, பிரசாந்த் மற்றும் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் வக்கீல்கள் நத்தானியல் சுந்தர்ராஜ், ரிச்சர்ட்டு எபினேசர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
முகாமில் அனைத்து துறை அரசு அலுவலர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், அரசு வக்கீல்கள், வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆள்கடத்தல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கும் நடந்தது. இதில் கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார். முடிவில் தலைமை குற்றவியல் நீதிபதி திருவேங்கட சீனிவாசன் நன்றி கூறினார்.