பழனியில், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்

பழனி ஒன்றிய பகுதி மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் பழனியில் நடந்தது.

Update: 2019-08-08 22:15 GMT
பழனி,

பழனி ஒன்றிய பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கும் முகாம் பழனி ஒன்றிய அலுவலகம், நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு இடங்களில் நடந்தது. பழனி நகராட்சி பள்ளியில் நடந்த முகாமுக்கு பழனி சப்-கலெக்டர் உமா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன், பழனி தாசில்தார் பழனிச்சாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் பழனி ஒன்றிய பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முகாமில் கை, கால், செவித்திறன், கண், மன வளர்ச்சி ஆகியவை குறித்து டாக்டர்களால் பரிசோதிக்கப்பட்டு, அவர்களுக்கான அடையாள அட்டை உடனடியாக வழங்கப்பட்டது. மேலும் ஏற்கனவே அட்டை உள்ளவர்கள் உதவித்தொகை பெறவும் விண்ணப்பித்தனர்.

இந்த முகாம் குறித்து சப்-கலெக்டர் உமா கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் 33 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 10 ஆயிரம் பேர் அடையாள அட்டைக்காக விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் வெகு தொலைவு பகுதியில் இருந்து மாவட்ட அலுவலகத்துக்கு வந்து செல்வதில் சிரமம் உள்ளதாலேயே, அந்தந்த ஒன்றிய பகுதியில் முகாம் நடத்தி அடையாள அட்டை, உதவித்தொகை உள்ளிட்டவற்றுக்கான விண்ணப்பம் பெற முடிவு செய்யப்பட்டது.

பழனி ஒன்றியத்தில் சுமார் 3 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்கான சிறப்பு முகாம் இன்று (நேற்று) பழனியில் 2 இடங்களில் நடந்தது. 40 சதவீதம் உடல் பாதிப்புள்ள அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக் கான ஸ்மார்ட் கார்டு பெறவும் விண்ணப்பிக்கலாம். இந்த முகாமில் குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாற்றுத்திறனாளிகள் முகாம் நடக்கும் பகுதிக்கு வந்து செல்ல போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் அனைத்து ஒன்றிய பகுதிகளிலும் இதுபோன்று முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்