ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-08-08 23:00 GMT
பென்னாகரம்,

கர்நாடக மாநிலம் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அதன்படி அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

பரிசல் சவாரிக்கு மீண்டும் தடை

மேலும், சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தி உள்ளார். அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் மெயின் அருவிக்கு செல்லும் வழியில் உள்ள கதவுக்கு பூட்டு போடப் பட்டுள்ளது. மேலும் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பரிசல்கள் இயக்க விதிக்கப்பட்ட தடை காரணமாக பரிசல் ஓட்டிகள் தங்கள் பரிசல்களை காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் கவிழ்த்து வைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக வந்ததால் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. 14 நாட்களுக்கு பின்னர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் மீண்டும் பரிசல் இயக்கப்பட்டு சவாரி நடைபெற்று வந்தது. தற்போது மீண்டும் பரிசல் சவாரிக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீர்வரத்து அதிகரிப்பு

நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று நீர்வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது. அதன்படி நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 5 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நாளை (சனிக்கிழமை) மாலைக்குள் ஒகேனக்கல்லுக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர்

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 5 ஆயிரத்து 16 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 97 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த மழை தீவிரம் அடையுமானால் அணைக்கு நீர்வரத்தானது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 53.47 அடியாக இருந்தது. நேற்று நீர்மட்டம் 53.98 அடியாக உயர்ந்தது.

மேலும் செய்திகள்