கோவில்பட்டியில் தொழிற்சங்கத்தினர் சங்கு ஊதியபடி ஆர்ப்பாட்டம்: ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
கோவில்பட்டியில் ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, பல்வேறு தொழிற்சங்கத்தினர் சங்கு ஊதியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் முதல் லாயல் மில் மேம்பாலம் வரையிலும் சுமார் ரூ.7 கோடி செலவில் நாற்கரசாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அங்கு சாலையோர ஓடை ஆக்கிரமிப்புகளில் உள்ள கட்டிடங்களை அகற்றாமல், அவற்றுக்கு முன்பாக புதிதாக வாறுகால் அமைக்கும் பணி தொடங்கியது.
இதனால் சாலை விரிவாக்கத்துக்கு பதிலாக சாலை சுருக்கமே ஏற்படும். எனவே ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னரே சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று அனைத்து தொழிற்சங்கத்தினர் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு சங்கு ஊதியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் அனைத்துலக சாதி சமய நல்லிணக்க பண்பாட்டு கழகம், 5-வது தூண் தலைவர் சங்கரலிங்கம், சமூக நீதி கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், மாவீரன் பூலித்தேவர் மக்கள் இயக்க தலைவர் செல்லத்துரை, அண்ணா தொழிற்சங்க தாலுகா செயலாளர் ராமகிருஷ்ணன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் மாரியப்பன், தொகுதி செயலாளர் ராஜேஷ் கண்ணன், பா.ம.க. மாவட்ட செயலாளர் வினோத்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் விஜயாவிடம் கோரிக்கை மனு வழங்கினர். மனுவை பெற்று கொண்ட அவர், இதுதொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 3 மணிக்கு தன்னுடைய(உதவி கலெக்டர்) அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி, உரிய தீர்வு காண்பதாக தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.