அதிராம்பட்டினத்தில் 4 படகுகளின் விசிறிகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

அதிராம்பட்டினத்தில் 4 படகுகளின் விசிறிகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை கடலோர காவல் படையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-08-08 22:15 GMT
அதிராம்பட்டினம்,

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆறுமுககிட்டங்கி தெருவை சேர்ந்த மீனவர்கள் நேற்று வழக்கம்போல கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தயாராகினர். இதையொட்டி ஆறுமுககிட்டங்கி தெரு பகுதியில் உள்ள மீன்பிடி துறைமுகத்துக்கு மீனவர்கள் சென்றனர்.

அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் மீனவர்கள் தங்களுடைய வலைகள், டீசல் மற்றும் மீன்பிடிக்க தேவையான உபகரணங்களை ஏற்றிக்கொண்டு இருந்தனர். அப்போது ஷேக் அப்துல்லா (வயது54), நாகராஜ் (50), மோகன் (39), சின்னதுரை (37) ஆகியோருக்கு சொந்தமான 4 படகுகளின் விசிறிகளை காணவில்லை. காப்பர் உலோகத்தால் ஆன அந்த விசிறிகள் படகுகளை கடலில் செலுத்த உதவ கூடியவை ஆகும். அவற்றை மர்ம நபர்கள் அவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், இதுபற்றி மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் நாகராஜுக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக நாகராஜ் அதிராம்பட்டினம் கடலோர காவல் படை நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் காவல் படையினர் வழக்குப்பதிவு செய்து 4 படகுகளில் இருந்து விசிறிகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்