சின்னாளபட்டி அருகே விபசாரம், 4 பெண்கள் உள்பட 6 பேருக்கு தர்மஅடி
சின்னாளபட்டி அருகே விபசாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 6 பேரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
சின்னாளபட்டி,
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள போக்குவரத்து நகரில் வசிக்கிற தபால் அதிகாரி சையது முஸ்தபா வீட்டில் கடந்த 5-ந்தேதி நகைகள் மற்றும் பணம் திருட்டு போனது. இதன் எதிரொலியாக அங்கு வசிக்கிற மக்கள் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் யாராவது வந்தால் அவர்கள் யார்? எதற்காக வந்தார்கள்? என விசாரணை செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று மாலை சந்தேகப்படும்படியான நபர் ஒருவர் போக்குவரத்து நகருக்கு வந்தார். அவரை அங்குள்ள மக்கள் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள், அவரை கயிற்றால் கட்டிப்போட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்க முயன்றனர். இதனால் பயந்துபோன அந்த நபர் போக்குவரத்து நகரில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடைபெறுவதாகவும், அந்த வீட்டிற்கு விபசாரத்திற்காக வந்ததாகவும் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். அங்கு 3 பெண்கள் இருந்தனர். மேலும் அங்கு ஒரு அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த அறையின் ஜன்னல் வழியாக பொதுமக்கள் எட்டிபார்த்தனர். அப்போது அங்கு ஒரு ஆணும், பெண்ணும் விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் அந்த அறையை திறந்து அங்கிருந்த 2 பேரையும் பிடித்தனர்.
இதைத்தொடர்ந்து பிடிபட்ட 4 பெண்கள் உள்பட 6 பேருக்கும் பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து, அங்குள்ள நடுத்தெருவுக்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து சின்னாளபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் இருந்து 6 பேரையும் மீட்டனர்.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அரசு பஸ் கண்டக்டருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு பிடித்து கடந்த ஒரு ஆண்டுக் கும் மேலாக பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரியவந்தது. பிடிபட்ட 4 பெண்களில் ஒருவர் விபசார புரோக்கர் ஆவார். அவர்தான் வீட்டை வாடகைக்கு பிடித்து பெண்களை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார்.
பிடிபட்ட மற்ற 3 பெண்களுக்கு திருமணம் ஆகி குடும்பம் உள்ளது. தினமும் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டுக்கு தெரியாமல் இங்கு வந்து பணத்திற்காக விபசாரம் செய்து உள்ளனர். பிடிபட்ட 2 ஆண்கள், திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர்கள். அவர்கள் பணம் கொடுத்து உல்லாசமாக இருக்க வந்ததாக தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் 6 பேரையும் சின்னாளபட்டி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு திண்டுக்கல் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத் அவர்களிடம் விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக பிடிபட்ட 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் சின்னாளப்பட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.