சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு கர்நாடக தலைவர்கள் இரங்கல்
சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு கர்நாடக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு,
முன்னாள் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு கர்நாடக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1999-ம் ஆண்டு சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்ற தேர்தலில் பல்லாரியில் போட்டியிட்டார். அப்போது அவர் ஒரு மாதம் அங்கு ஓட்டலில் தங்கியிருந்தார். அதே ஓட்டலில் நானும் தங்கினேன். அப்போது அவர் கன்னடத்தை கற்று, கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்களுடன் கன்னடத்திலேயே பேசினார்.
அவர் வெளியுறவு மந்திரியாக இருந்தபோது, சிறப்பான முறையில் பணியாற்றினார். உலக நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவிகளை செய்தார். அவர் திடீரென மறைந்தது அதிர்ச்சி அளிக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன். இந்த இழப்பை தங்கும் சக்தியை அவரது குடும்பத்தினருக்கு இறைவன் வழங்கட்டும்.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளர்.
தேவேகவுடா-சித்தராமையா
முன்னாள் பிரதமர் தேவேகவுடா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுஷ்மா சுவராஜுன் திடீர் மறைவை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கட்சிகளை தாண்டி அவர் அனைத்து தலைவர்களுடன் நல்லுறவை கொண்டிருந்தார். நாட்டின் வளர்ச்சியில் அவரது பங்கு முக்கியமானது. அவரது மறைவுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துயரத்தில் இருந்து மீள அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இறைவன் பலத்தை வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா அமைதி பெற வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தினேஷ் குண்டுராவ்
கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தனது டுவிட்டர் பதிவில், “சுஷ்மா சுவராஜ் மறைந்தார் என்ற செய்தி கேட்டு துக்கம் அடைந்தேன். நாட்டின் சிறந்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவரான அவர் நல்ல பேச்சாளர். அனைவராலும் மதிக்கப்பட்டவர், விரும்பப்பட்டவர். அவரை நாங்கள் தவறவிடுகிறோம்“ என்றார்.
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, சட்டசபை சபாநாயகர் காகேரி, காங்கிரஸ் செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.