சேலம் அருகே கொடூரம், மனைவியை அடித்துக்கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை - போலீசார் விசாரணை
சேலம் அருகே, மனைவியை அடித்துக்கொன்று ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொடூர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வாழப்பாடி,
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 43). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவரது மனைவி சுவேதா (35). இந்த தம்பதிகளுக்கு பிரகதி (15) என்ற மகளும், நவதீப் (13) என்ற மகனும் உள்ளனர். பிரகதி 10-ம் வகுப்பு படித்து வருகிறாள். நவதீப் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்தநிலையில் செல்வத்துக்கு கடன் தொல்லை ஏற்பட்டது. இதனால் அவர் சொந்தமாக வைத்திருந்த ஆட்டோவை விற்று விட்டார். பின்னர் அயோத்தியாப்பட்டணம் அருகில் ஒருவருக்கு சொந்தமான ஆட்டோவில் டிரைவராக வேலைபார்த்து வந்தார். இதற்கிடையில் சுவேதாவின் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். இதையடுத்து செல்வம் தனது குடும்பத்துடன் கூட்டாத்துப்பட்டிக்கு வந்து மாமியார் வீட்டில் தங்கினார். அங்கிருந்தே ஆட்டோ ஓட்டிவந்தார்.
நேற்று காலை செல்வத்தின் மகளும், மகனும் பள்ளிக்கு சென்று விட்டனர். மாலையில் பள்ளிநேரம் முடிந்து நவதீப் மாலை 6 மணியளவில் வீட்டுக்கு வந்தான். அப்போது வீடு பூட்டிக்கிடந்தது. இதுபற்றி அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தான். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் மின்விசிறியில் செல்வத்தின் உடல் தொங்கியது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது அங்குள்ள அறையில் சுவேதா கொலை செய்யப்பட்டு கிடந்தார். அருகில் ரத்தக்கறையுடன் மண்வெட்டியும் கிடந்தது. எனவே மனைவியை மண்வெட்டியால் அடித்து கொன்று விட்டு செல்வம் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது.
பெற்றோர் உடலை பார்த்து மகளும், மகனும் கதறி அழுதனர். பின்னர் 2 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்வம் மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? கடன் தொல்லையா? அல்லது குடும்ப தகராறா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவியை அடித்துக்கொன்று விட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.