கடல்நீர் ஊடுருவியதால் விவசாயம் பாதிப்பு, உடன்குடி பகுதியில் குளங்கள் வறண்டன

உடன்குடி பகுதியில் குளங்கள் வறண்டன. இதனால் ஒரு குடம் தண்ணீரை பொதுமக்கள் ரூ.7-க்கு வாங்கும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

Update: 2019-08-06 22:45 GMT
உடன்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் உடன்குடியும் ஒன்றாகும். இங்கு தயாராகும் கருப்புக்கட்டிக்கு எப்போதும் கடும் கிராக்கி உண்டு. உடன்குடி பகுதியில் நிலத்தடி நீரை பாதுகாத்து கொண்டு இருப்பது மேற்கே உள்ள தாங்கைகுளம், கிழக்கே உள்ள தருவைகுளம் ஆகும். இந்த குளங்களுக்கு பல ஆண்டுகளாக கால்வாய் மூலம் வரவேண்டிய தண்ணீர் வரவில்லை. மேலும் இந்த பகுதியை மழையும் புறக்கணித்ததால் இந்த குளங்களில் வறட்சி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. தற்போது, இந்த குளங்கள் வறண்டு காணப்படுகின்றன.

விவசாய நிலங்களில் எல்லாம் கடல் நீர் ஊடுருவி, நிலங்கள் அனைத்தும் உவர்ப்பு நிலமாக மாறியது. நல்ல தண்ணீர் எல்லாம் உப்பு நீராகியது. மேலும் நெல், வாழை, காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயமும் அடியோடு அழிந்து விவசாய விளை நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு விலை நிலங்களாக மாறி வருகிறது. அங்குள்ள மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு வருகின்றன. பல்வேறு தேவைகளுக்கு கூட ஆழ்குழாய் கிணறு தண்ணீரை இப்பகுதி மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சில இடங்களில் கசப்பாகவும், சில இடங்களில் உவர்ப்பாகவும் தண்ணீர் மாறிவிட்டது.

உடன்குடி பகுதி மக்களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் மற்றும் திருச்செந்தூர் எல்லப்பன் நாயக்கன்குளத்தின் மூலம் ஒருநாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது நிலவி வரும் கடும் வறட்சியின் காரணமாக 3 அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே இந்த குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் அவசர தேவைக்கு குடிநீரை பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தனிநபர்கள் லாரிகளில் குடிநீர் எடுத்து வந்து விற்பனை செய்கின்றனர். ஒரு குடம் குடிநீர் ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்த தண்ணீரும் எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. திடீரென்று தண்ணீர் லாரிகள் வரும். அப்போது பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு தண்ணீர் வாங்க செல்வது பரிதாபமாக உள்ளது.

எனவே, உடன்குடியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஸ்ரீவைகுண்டம் அணை வழியாக ஆண்டுதோறும் கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை கால்வாய் மூலம் கொண்டு வந்து இந்த குளங்களை நிரப்ப வேண்டும். அல்லது வருண பகவான் மனம் இறங்கி மழையை கொட்டி தீர்த்தால்தான் இந்த குளங்கள் நிரம்பும். அப்படி நடந்தால் தான் பொதுமக்களின் குடிநீர் பிரச்சினை தீரும், விவசாய நிலங்களும் புத்துயிர் பெறும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்