மும்பையில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

மும்பையில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

Update: 2019-08-06 23:06 GMT
மும்பை,

மராட்டியத்தில் பருவமழை தீவிரம் அடைந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏராளமான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.மும்பையில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொட்டி தீர்த்த கனமழையால் நகரமே வெள்ளக்காடானது. மத்திய ரெயில்வே வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவைகள் அடியோடு முடங்கின. நீண்ட தூர ரெயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன. பல எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

மீண்டும் கனமழை

அதன்பின்னர் கடந்த 2 நாட்களாக மழையின் தீவிரம் குறைந்து உள்ளது. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். ரெயில்கள் வழக்கம் போல் ஓடத்தொடங்கி உள்ளன.

இந்தநிலையில், மும்பையில் மீண்டும் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுதவிர சத்தாரா, சிந்துதுர்க், ரத்னகிரி, புனே, கோலாப்பூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

இந்த 5 மாவட்டங்களுக்கும் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு தயார் நிலையில் இருக்கும்படி ‘ஹை அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்