பரமக்குடி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது; 30¼ பவுன் நகை பறிமுதல்

பரமக்குடி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30¼ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-08-06 23:30 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் வழிப்பறி மற்றும் வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தன. இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, பரமக்குடி தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் ராமசுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார்.

அதன்படி தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில் பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த தேனி மாவட்டம் கம்பம் திருவள்ளுவர் காலனி பகுதியை சேர்ந்த கருமலையான் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், பரமக்குடி பகுதியில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து திருடியதும், தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து தேனி மாவட்டம் கம்பம் திருவள்ளுவர் காலனியை சேர்ந்த அய்யப்பன்(வயது 20), கருமலையான், கண்ணன்(32), சின்னமனூர் ஹக்கிம் ராஜா(38), பரமக்குடி பாலன்நகர் குமார்(20) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து சுமார் 30¼ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்