காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் அசம்பாவிதங்களை தடுக்க திருப்பூரில் பலத்த போலீ்ஸ் பாதுகாப்பு

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க திருப்பூரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியை கூடுதல் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் ஆய்வு செய்தார்.

Update: 2019-08-06 23:15 GMT
திருப்பூர்,

கா‌‌ஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு மத்திய அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர் முழுவதும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. திருப்பூர் ரெயில் நிலையம், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். ரெயில் நிலையம் முன்பு, தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனமும் நிறுத்தப்பட்டு இருந்தது.

அதுபோல் மாநகரில் 20 இடங்கள் முக்கிய பகுதியாக கண்டறியப்பட்டு அங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

ரோந்து போலீசாரும் பணியமர்த்தப்பட்டனர். காங்கேயம் கிராஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் அதிகமாக குவிக்கப்பட்டு இருந்தனர். மாநகர் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்தநிலையில் கோவை, திருப்பூர், சேலம் மாநகர் மற்றும் மேற்கு மண்டலம் முழுவதும் பாதுகாப்பு பணியை கண்காணிக்கும் அதிகாரியாக கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை அவர் திருப்பூர் மாநகரில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு பணியை ஆய்வு செய்தார். மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் சஞ்சய்குமார் உடன் இருந்தார்.

இதுபோல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் 3 ‌ஷிப்டுகளில் 250 போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்