ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மூலம் இந்தியாவுக்கு முழு சுதந்திரம் கிடைத்து விட்டது - உத்தவ் தாக்கரே கருத்து

ஜம்மு-காஷ்மீருக்கு அரசியல் சாசனத்தின் படி வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் இந்தியாவுக்கு முழு சுதந்திரம் கிடைத்து இருப்பதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

Update: 2019-08-05 23:51 GMT
மும்பை,

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வரவேற்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் நேற்று தனது ‘மாதோ’ இல்லத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370-வது பிரிவை நீக்கியதன் மூலம் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்து உள்ளது. மறைந்த தலைவர்களான பால்தாக்கரே, வாஜ்பாய் ஆகியோரின் கனவுகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

மிகப்பெரிய கனவு உண்மையானதில், நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நமது நாடு முழு சுதந்திரம் அடைந்து உள்ளது. எதிர்க்கட்சிகள் அரசியல் வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு, நாட்டின் இறையாண்மைக்கு ஆதரிக்க வேண்டும். இந்த முடிவை எதிர்ப்பவர்களை எதிர்கொள்ளும் அளவுக்கு அரசு வலுவாக உள்ளது.

அமெரிக்கா போன்ற நாடுகள் எங்கள் உள்விவகாரத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். பாகிஸ்தான் ஆக்கிரமித்த பிரதேசத்தை நாங்கள் இனி கேட்க விரும்பவில்லை. பாகிஸ்தானையே ஆக்கிரமிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அவ்வப்போது டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டு கொண்டு இருந்தார். அந்த பதிவுகளில் அவர் கூறியிருப்பதாவது:-

இது இந்தியாவுக்கு வரலாற்று சிறப்பு மிக்க தினம். 370-வது பிரிவை நீக்கியதின் மூலம் இந்தியாவின் ஒரு உண்மையான பகுதியாக காஷ்மீர் மாறி உள்ளது. இது மக்களால் தீர்மானிக்கப்பட்ட பாதுகாப்பான, முன்னேற்றத்துக்கான பாதையாகும். தேச விரோத பிரிவினைவாதிகளுக்கான பாதை மூடப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, நாடாளுமன்றம், இந்திய குடிமக்களுக்கு எனது வாழ்த்துக்கள். இதனால் தான் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை மக்களவை தேர்தலில் நாங்கள் ஆதரித்தோம். இப்போது ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மறுசீரமைப்பால், அங்குள்ள குடிமக்கள் அமைதி, முன்னேற்றம் அடைவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில், “ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அரசியல் சாசன சட்டப்பிரிவின் 35 ஏ-வை தொடுபவர்கள் எரிக்கப்பட வேண்டும். காஷ்மீர் மக்கள் தியாகத்துக்கு தயாராக வேண்டும் என்று அந்த மாநில முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி கூறியுள்ளார். நாட்டின் உள்துறை மந்திரி இதுபோன்ற தூண்டுதல் மற்றும் கிளர்ச்சி மொழியை மகிழ்விக்கக் கூடாது. இது பயங்கரவாதத்தின் மொழி. அவரை புதிதாக கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சிறைக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், கலவரத்தைத் தூண்டுவதற்கான அவர்களின் சதி காஷ்மீரில் வெற்றி பெற்று விடும்” என்று கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையே காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த செய்தி கேட்டு மும்பையில் உள்ள சிவசேனா கட்சி அலுவலகமான சிவசேனா பவன் முன்பு ஏராளமான தொண்டர்கள் கூடினர். அவர்கள் ஆட்டம், பாட்டத்துடன் மத்திய அரசின் முடிவை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

மேலும் செய்திகள்