புதுச்சேரிக்கு வந்தவர்களை வழிமறித்து, துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறித்த 3 ரவுடிகள் கைது - போலீஸ் போல் நடித்து துணிகரம்

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வந்தவர்களை வழிமறித்து போலீஸ் போல் நடித்து துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறித்த 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-08-05 22:45 GMT
கோட்டக்குப்பம்,

சென்னை கடப்பேரி முத்தமிழ் நகரை சேர்ந்தவர் சிவா (வயது 20). இவரது நண்பர்கள் வெங்கடேஷ், சூர்யா, சதீஷ்குமார், கார்த்திக், சஞ்சய், விக்கி. இவர்கள் அனைவரும் மோட்டார் சைக்கிள்களில் புதுச்சேரியை சுற்றி பார்க்க வந்து கொண்டிருந்தனர். விழுப்புரம் மாவட்டம் அனிச்சங்குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 3 பேர் அவர்களை வழிமறித்தனர்.

தங்களை போலீஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு துப்பாக்கியை காட்டி மிரட்டி 750 ரூபாய் பணம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதனால் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து உதவி கேட்டு கூச்சல் போட்டனர். அந்த சமயத்தில் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் ஜீப்பில் ரோந்து வந்தனர். அவர்களிடம் பணத்தை பறிகொடுத்த 5 பேரும் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தனர்.

உடனே போலீசார் உஷாரானார்கள். வழிப்பறி கொள்ளையர்கள் தப்பிச் சென்ற பாதையில் அவர்களை தேடிச் சென்றனர். அப்போது சிறிது தூரத்தில் நின்ற 3 பேர் போலீஸ் ஜீப்பை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் துரத்திச் சென்று அவர்களை மடக்கினர். இதில் 2 பேர் சிக்கினர். ஒருவர் தப்பி ஓடினார்.

பிடிபட்டவர்களை கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 2 பேரும் புதுச்சேரி மாநிலம் பெரிய காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் கவுதம் (வயது 24), ஜெயப்பிரகாஷ் (24) என்பதும் தப்பி ஓடியவர் பிரகாஷ் என்பதும் தெரியவந்தது.

துப்பாக்கி கிடைத்தது எப்படி? என்பது குறித்து விசாரித்ததில் ஆன்-லைன் வர்த்தகம் மூலம் வாங்கியது தெரியவந்தது. அந்த துப்பாக்கியைக் கொண்டு புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், காதல் ஜோடிகள் ஆகியோரை குறிவைத்து தங்களை போலீஸ் என்று கூறி மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர்.

இதையடுத்து கவுதம், ஜெயப்பிரகாஷ் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய பிரகாசும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரிக்கு வந்த சுற்றுலா பயணிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்