சென்னை மருத்துவ கல்லூரியில் மரம் நட்டு மாணவர்கள் நூதன போராட்டம்
சென்னை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில், மருத்துவ மாணவர்கள் நேற்று மரம் நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
தேசிய மருத்துவ மசோதாவை எதிர்த்து சென்னை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில், மருத்துவ மாணவர்கள் நேற்று மரம் நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நூதன போராட்டத்துக்கு சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர் சங்கத் தலைவர் மோகன் தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது மோகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு தேசிய மருத்துவ மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் இந்திய மருத்துவ கழகத்துக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை நிறுவ பார்க்கிறது. இந்த மசோதா மூலம் எம்.பி.பி.எஸ். மட்டுமின்றி மற்ற மருத்துவ படிப்பு பயின்றவர்களுக்கு 6 மாதகாலம் பயிற்சி அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்க அதிகாரம் வழங்கப்படும்.
மேலும் 5 ஆண்டு படிப்பில் மாதத்துக்கு ஒரு தேர்வு மற்றும் வருடத்துக்கு 2 தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெறும் மருத்துவ மாணவர்கள் கடைசி வருடம் கிடைக்கும் செய்முறை பயிற்சி பெறுவதற்கு பதில் ‘நெக்ஸ்ட்’ மட்டுமே படிக்கும் நிலை உருவாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.