பாலியல் குற்றங்களில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் பற்றிய விழிப்புணர்வு பேரணி - போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் பற்றிய விழிப்புணர்வு பேரணி கடலூரில் நேற்று நடந்தது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தொடங்கி வைத்தார்.
கடலூர்,
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் பற்றிய விழிப்புணர்வு பேரணி கடலூரில் நடைபெற்றது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இப்பேரணி கடலூர் பெரியார் சிலை அருகில் இருந்து தொடங்கியது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பதாகைகளுடன் கலந்து கொண்டனர். அந்த பதாகைகளில் வேண்டும், வேண்டும் பள்ளிவயதில் படிப்பு வேண்டும், ஒழிப்போம், ஒழிப்போம் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம், பெண்குழந்தையை பாதுகாப்போம் என்பது போன்ற வாசகங்கள் இருந்தன. இப்பேரணி பாரதிசாலை வழியாக சென்று டவுன்ஹால் முன்பு நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், மாவட்ட குழந்தைகள் நலக்குழும தலைவர் ஹென்றி லாரன்ஸ், தொழிலாளர் துறை உதவி ஆணையர் பாஸ்கரன், தொழிலாளர் துறை அலுவலர் ஞானபிரகாசம், இன்ஸ்பெக்டர் உதயகுமார், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தைபொறுத்தவரையில் கடந்த 3 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிராக 159 பாலியல் குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வழக்குகளில் 23 குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி உள்ளது. இதில் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவான ஒரு குற்றவழக்கில் குற்றவாளி பழனிசாமிக்கு அதிகபட்சமாக 55 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.