கெடிலம் ஆற்றில் மணல் கொள்ளை, செல்போன் வீடியோ மூலம் அதிகாரிகளிடம் இளைஞர்கள் புகார்
நடுவீரப்பட்டு அருகே கெடிலம் ஆற்றில் நடந்து வரும் மணல் கொள்ளை குறித்து செல்போன் வீடியோ மூலம் அதிகாரிகளிடம் இளைஞர்கள் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லிக்குப்பம்,
நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளம் ஊராட்சியில் புதிய ஏரி உள்ளது. ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்கப்பட்டு, நடுவீரப்பட்டு அருகில் உள்ள கெடிலம் ஆற்றங்கரை பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மண் எடுத்து செல்லும் லாரிகள் ஆற்றங்கரையில் வண்டல் மண்ணை கொட்டிவிட்டு, பின்னர் ஆற்றில் இருந்து மணலை அள்ளி செல்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், அந்த பகுதியை சேர்ந்த சிலர், இதுபற்றி கூறி ஆற்றில் மணல் கொள்ளை நடந்து வருகிறது உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
பொதுமக்களின் புகாரை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடுவீரப்பட்டு அருகே உள்ள கெடிலம் ஆற்றுக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சில இடங்களில் மணல் அள்ளப்பட்டு இருந்தது. இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அதில் அவர்கள் இரவு நேரங்களில் ஆற்றில் இருந்து லாரிகளில் மணல் கடத்தல் நடப்பதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் இளைஞர்கள் சிலர், மணல் கொள்ளை நடைபெறுவதை செல்போனில் வீடியோ எடுத்து வைத்து இருப்பதாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். தொடர்ந்து வீடியோவையும் அவர்கள் அதிகாரிகளிடம் காண்பித்தனர். அதை பார்த்த அதிகாரிகள், கரையை பலப்படுத்தும் பணியில் இருப்பவர்கள் தான் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இருப்பார்கள் என்று உடனடியாக உறுதிப்படுத்திட முடியாது. எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.