12,459 பெண்களுக்கு நாட்டுக் கோழிகள் கலெக்டர் ஷில்பா தகவல்

நெல்லை மாவட்டத்தில் 12,459 பெண்களுக்கு இலவசமாக நாட்டு கோழிகள் வழங்கப்பட உள்ளது என கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

Update: 2019-08-04 22:35 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் 12,459 பெண்களுக்கு இலவசமாக நாட்டு கோழிகள் வழங்கப்பட உள்ளது என கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இலவசமாக நாட்டுக்கோழி

கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச ‘அசில்’ இன நாட்டுக்கோழிகள் வழங்கப்பட உள்ளன. நெல்லை மாவட்டத்தில் ஒரு யூனியனுக்கு 500 பெண்கள் வீதம் 19 யூனியன்களில் 9,500 பேருக்கு கோழிகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ள ஏழைகளின் பட்டியல் எண் உடைய மகளிர் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதுதவிர மாவட்டத்தில் உள்ள 36 பேரூராட்சிகளில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கும் நாட்டுக்கோழிகள் வழங்கப்படுகிறது. பேரூராட்சி பகுதியில் மட்டும் 2,959 பெண்களுக்கு கோழிகள் வழங்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 12 ஆயிரத்து 459 பெண்களுக்கு கோழிகள் வழங்கப்பட உள்ளது.

15-ந் தேதிக்குள்

விண்ணப்பிக்க வேண்டும்

இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுகிறவர்களுக்கு தலா 25 எண்ணம் அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கப்படும். ஏற்கனவே கால்நடை பராமரிப்பு துறை மூலம் இலவச ஆடு, மாடு, கோழிகள் பெற்றிருக்க கூடாது. இதற்குரிய விண்ணப்பங்களை கால்நடை மருந்தகம், கால்நடை உதவி டாக்டர்களை அணுகி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங் களை வருகிற 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்