கடனை முறையாக செலுத்தும் விவசாயிகளுக்கு உதவ தயார் - பாரதியார் கிராம வங்கி தலைவர் பேச்சு

கடனை முறையாக திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு உதவ தயார் என்று பாரதியார் கிராம வங்கி தலைவர் கூறினார்.

Update: 2019-08-04 23:00 GMT
பாகூர்,

பாகூரை அடுத்த குருவிநத்தம் உழவர் மன்றம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு உழவர்மன்ற தலைவர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். பாரதியார் வங்கியின் பாகூர் கிளை மேலாளர் ஆனந்தராஜன் முன்னிலை வகித்தார். செயலாளர் கெஜவர்தன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி பாரதியார் கிராம வங்கி மாநில தலைவர் மார்கரட் ரீட்டா, நபார்டு வங்கியின் உதவி பொதுமேலாளர் உமா குருமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு வங்கி மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினர். மேலும் உழவர்மன்றம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் தொடங்கியதற்கு விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

விழாவில் பாரதியார் வங்கி தலைவர் மார்கரட் ரீட்டா பேசுகையில், குருவிநத்தம் உழவர்மன்றம் புதுச்சேரியில் சிறப்பாக இயங்கி வருகிறது. இதேபோல் செயல்படும் விவசாயிகளுக்கு தேவையான கடனுதவிகளை உடனுக்குடன் தங்கள் வங்கி வழங்கி வருகிறது. உழவர் அட்டை மூலம் பயிர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. முறையாக கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் 3 சதவீதம் தள்ளுபடி செய்வதுடன், மீண்டும் அவர்களுக்கு கடனுதவி வழங்க தயாராக இருக்கிறோம். கறவை மாடுகளுக்கு மானியத்துடன் கடன் வழங்கி வருகிறோம். உழவர்மன்றங்களுக்கு அறுவடை எந்திரங்கள் வாங்க கடனுதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

விழாவினை தொடர்ந்து உழவர்மன்றம் சார்பில் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நோக்கில் வீடு வீடாக சென்று துணிப்பைகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்