மனித-வனவிலங்கு மோதலை தடுக்க தனிப்பிரிவு - வன அலுவலர்கள் சங்கம் தீர்மானம்
மனித-வனவிலங்கு மோதலை தடுக்க தனிப்பிரிவு தொடங்க வேண்டும் என்று கூடலூரில் நடந்த தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
கூடலூர்,
தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் கூடலூர் நாடார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், வனச்சரகர்கள் தயானந்தன், விஜய், சரவணன், மாவட்ட துணை தலைவர் சந்தனராஜ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜார்ஜ் பிரவீன்சன், குமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சிவப்பிரகாசம் வரவேற்றார். தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க மாநில தலைவர் முருகேசன், மாநில பொருளாளர் சுதீர்குமார் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் கூடலூர் வன கோட்டத்தில் நீண்ட காலமாக பணியாற்றும் வன காப்பாளர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க அதிகாரிகள் முன்வர வேண்டும். பின்னர் காலியாக கிடக்கும் பணியிடங்களுக்கு புதியதாக நியமிக்கப்பட உள்ள வன காப்பாளர்களை நியமிக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக பணியாற்றும் வன காப்பாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும். ஊருக்குள் வரும் வனவிலங்குகளை விரட்டுவதற்கு தற்போது உள்ள வன ஊழியர்கள் இரவு, பகலாக விரட்டுவதால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. எனவே மனிதர்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு இடையே நடைபெறும் மோதலை தடுக்க தனிப்பிரிவு தொடங்க வேண்டும். இதற்காக தனியாக கூடுதல் ஊழியர்களை பணியில் நியமிக்க வேண்டும். வனச்சரகர்கள், வனவர்களுக்கு கூடுதல் பணிக்கான படிகள் வழங்குவதை போல் வன காப்பாளர்கள், காவலர்களுக்கும் வழங்க வேண்டும்.
கடந்த 2010-ம் ஆண்டுக்கு பிறகு பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் வன காவலர்களுக்கும் பதவி உயர்வு அளிக்க வேண்டும். வனத்துறையில் காலியாக உள்ளபணியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 110 விதிகளின் கீழ் வன ஊழியர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் அறிவிப்பு, வேட்டை தடுப்பு காவலர்களுக்கு சம்பள உயர்வு அளித்த தமிழக முதல்- அமைச்சர், வன உயரதிகாரிகளுக்கு நன்றியை தெரிவிப்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் வனவர்கள், வன காப்பாளர்கள், காவலர்கள் உள்பட வனத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் அனிஷ் நன்றி கூறினார். முன்னதாக தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க மாநில தலைவர் முருகேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாநில அளவில் வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். வேட்டை தடுப்பு காவலர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
வனவர், வன காப்பாளர்களுக்கும் சம்பள உயர்வு அளிக்க வேண்டும். மேலும் காவல் துறைக்கு இணையான ஊதியத்தை வனத்துறையினருக்கும் வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.