குளித்தலை தந்தை-மகன் படுகொலை: குடும்பத்தினரை நேரில் சந்தித்து விவசாய சங்கத்தினர் ஆறுதல் நிதி உதவி வழங்கினர்

குளித்தலை தந்தை-மகன் படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து விவசாய சங்கத்தினர் ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினர்.

Update: 2019-08-04 22:15 GMT
நச்சலூர்,

திருச்சி மாவட்டம் இனாம்புலியூரை சேர்ந்தவர் வீரமலை(வயது 60). விவசாயி. இவருடைய மகன் நல்லதம்பி(42). இந்தநிலையில் குளம் ஆக்கிரமிப்பு புகார் சம்பந்தமாக கடந்த 29-ந்தேதி ஒரு கும்பல் தந்தை-மகனை அரிவாளால் வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இந்த கொலை சம்பவத்தை அறிந்து நேற்று சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் சார்பில் அய்யப்பன், காவிரி மீட்பு உரிமைக்குழுவின் சார்பில் சத்தியமூர்த்தி, சமூக நீதி பேரவை சார்பில் ரவிக்குமார் தமிழக விவசாய சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் சின்னத்துரை ஆகியோர் முதலைப்பட்டி பகுதிக்கு சென்று ஆக்கிரமைத்த குளத்தை பார்வையிட்டனர். பின்னர் கொலையில் இறந்த வீரமலை, நல்லதம்பி ஆகியோர் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் அவர்களுக்கு நிதியுதவி வழங்கினர்.

கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும்

பின்னர் அவர்கள் நிருபர் களிடம் கூறுகையில், முதலைப்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான குளத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து மீட்க வழக்கு தொடர்ந்து போராடியதற்காக கொலை செய்யப்பட்ட வீரமலை மற்றும் நல்லதம்பி குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இறந்தவரின் மகன்-மகள் ஆகியோர்களின் கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும். குடும்பத்திற்கு குற்றவாளிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் அதிக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். மேலும் ஆக்கிரமைப்பில் உள்ள நிலத்தை மீட்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும். மேலும் இதுபோன்ற நீர்நிலைகள் ஆக்கிரமைப்புகள் உள்ள குளத்தை அகற்ற வேண்டும்.

குளம் சம்பந்தமாக வழக்குகள் தொடரும் சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து ரகசிய விசாரணை நடத்தினால் மட்டுமே இது போல் கொலைகள் நடப்பதை தடுக்க முடியும். இது சம்பந்தாக நாங்கள் அரசுக்கு கோரிக்கைகள் வைக்கின்றோம். இந்த குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் போராட தயாராக உள்ளோம். என்றனர் பின்னர் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கினர்.

மேலும் செய்திகள்