பத்ராவதி டவுனில் பயங்கரம் கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து படுகொலை மர்ம நபர்களை போலீஸ் தேடுகிறது

பத்ராவதி டவுனில் கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து படுகொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2019-08-04 22:30 GMT
பெங்களூரு, 

பத்ராவதி டவுனில் கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து படுகொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

கல்லூரி மாணவி படுகொலை

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி டவுன் பகுதியில் வசித்து வந்தவர் இந்திரா(வயது 17). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பி.யூ. கல்லூரியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் தனது மாமா ஜெகதீஷ் வீட்டில் படுத்து தூங்கினார். இந்திராவுடன் அவருடைய அத்தைகள் 2 பேர் படுத்திருந்தனர். ஜெகதீஷ் வீட்டின் வெளியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நள்ளிரவு வேளையில் இந்திரா வீட்டில் இருந்து வெளியே வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த யாரோ மர்ம நபர்கள், இந்திராவை சரமாரியாக தாக்கி அவருடைய கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே இந்திரா ரத்த வெள்ளத்தில் பிணமானார். இதையடுத்து அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

கழுத்து அறுக்கப்பட்ட நிலையில்...

இதற்கிடையே திடீரென விழித்தெழுந்த ஜெகதீசும், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களும் இந்திரா காணாமல் போய்விட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அக்கம்பக்கத்தில் தேடினர். அப்போது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இந்திரா பிணமாக கிடந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி பத்ராவதி ஒசமனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இந்திராவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக பத்ராவதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதையடுத்து நேற்று காலையில் இந்திராவின் வீட்டிற்கு சென்ற போலீசார், வீட்டில் இருந்தவர்களிடமும், அக்கம்பக்கத்தினரிடமும் விசாரணை நடத்தினர்.

போலீஸ் குவிப்பு

இதற்கிடையே இந்திராவின் செல்போன் எண்ணை கைப்பற்றி அதன்மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இக்கொலை வழக்கில் தொடர்புடைய மர்ம நபர்களையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்