நாமகிரிப்பேட்டை பகுதியில் வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்ட சினிமா டைரக்டர் உள்பட 5 பேர் கைது
நாமகிரிப்பேட்டை பகுதியில் தனியாக இருக்கும் பெரிய வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்த சினிமா டைரக்டர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிச்சமுத்து மற்றும் போலீசார் புதுப்பட்டி-நாமகிரிப்பேட்டை ரோட்டில் உள்ள வாணிக்கிணறு பிரிவு ரோடு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் வெள்ளை நிற கார் ஒன்று நின்று கொண்டு இருந்தது. அந்த காருக்கு பின்னால் 5 பேர் நின்று கொண்டு காரசாரமாக பேசிக்கொண்டு இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அருகில் சென்றனர். போலீசார் வருவதை கண்டதும் அந்த நபர்கள் அங்கிருந்து காரில் ஏறி தப்பிக்க முயன்றனர். ஆனால் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் அவர்களை விரட்டி சென்று சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதனால் அவர்கள் 5 பேரையும், போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் துருவி, துருவி தனித்தனியாக விசாரணை மேற் கொண்டனர்.
அப்போது அவர்கள் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தண்ணீர்பந்தல்காடு பகுதியைச் சேர்ந்த டிரைவர் ரவி என்கிற ரவிக்குமார் (வயது52), தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, முத்தனாம்பட்டி அருகிலுள்ள போவில்பட்டி பகுதியைச் சேர்ந்த சினிமா டைரக்டர் பாண்டி என்கிற பாண்டியன் (34), பெரம்பலூர் மாவட்டம், அல்லி நகரம், ஆலந்தூர்கேட் பகுதியைச் சேர்ந்த சமையல் மாஸ்டர் விஜயகுமார் (41), திருச்சி 3-வது கிராஸ் கிழக்கு தெருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் கண்ணன் என்கிற தவனேஸ்வரன் (49), காஞ்சீபுரம் மாவட்டம், ஊரப்பாக்கம் மேற்கு, எம்.ஜி.நகர், மாமன்னர் அசோகர் சாலையைச் சேர்ந்த வக்கீல் பிரதீப் சரண் (25) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது.இவர்கள் 5 பேரும் நாமகிரிப்பேட்டை பகுதியில் தனியாக இருக்கிற பெரிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க போலீசாரிடம் வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த 5 பேரையும் கைது செய்தனர். இவர்களை போலீசார் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் வந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட சினிமா டைரக்டர் பாண்டியன் பாதியில் நிற்கும் படத்தை முடிக்க தனது நண்பர்களுடன் கொள்ளையடிக்க முயன்றது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.