ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே 2 யானைகள் முகாம் பொதுமக்கள் கவலை

ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே 2 யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2019-08-04 22:30 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரண்டபள்ளி வனப்பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள் கடந்த 1 வாரத்திற்கு முன்பு இடம் பெயர்ந்து ஆலூர், தின்னூர், தட்டிகானபள்ளி, முத்தாலி வழியாக சென்று கெலவரப்பள்ளி அணை அருகே உள்ள தைலத்தோப்பில் புகுந்தன. பகல் நேரங்களில் அந்த 2 யானைகளும் தோப்பை விட்டு வெளியே வந்து அணையில் உற்சாக குளியல் போட்டும், தண்ணீரை வாரி இறைத்தவாறும் விளையாடி மகிழ்ந்தன.

இந்த 2 யானைகளின் நடமாட்டத்தால், அந்த பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் கவலை அடைந்ததோடு அச்சத்திலும் இருந்தனர். மேலும் அந்த யானைகளை மீண்டும் பேரண்டபள்ளி காட்டுக்கு விரட்டியடிக்குமாறு வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு போராடி 2 யானைகளையும் பேரண்டபள்ளி காட்டுக்கு விரட்டினார்கள்.

ஆனாலும் அவை அன்று நள்ளிரவிலோ, மறுநாளிலோ மீண்டும் அணைப்பகுதிக்கே வந்துவிடுகின்றன. இவ்வாறு அந்த 2 யானைகளும் தொடர்ந்து கெலவரப்பள்ளி அணை பகுதியிலேயே பதுங்கியிருந்து நடமாடி வருவதால், வனத்துறையின் சார்பில் கெலவரப்பள்ளி, பெத்தகுள்ளு மற்றும் அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறும், இரவு நேரங்களில் தனியாக நடமாடக்கூடாது என்றும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் டார்ச் லைட் அடித்து சத்தம் எழுப்பியவாறு வெளியே வர வேண்டும் என்றும் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்ந்து அந்த 2 யானைகளும் நீண்ட நாட்களாக கெலவரப்பள்ளி அணை பகுதியிலேயே பதுங்கியிருந்து, நடமாடி வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் கவலையும், அச்சமும் அடைந்துள்ளனர். தொடர்ந்து பேரண்டபள்ளி காட்டுக்கு அந்த யானைகளை விரட்டி வரும் நிலையில், அவை மீண்டும், மீண்டும் அங்கிருந்து ஊருக்குள் திரும்பி வருவதால், தற்போது சூளகிரி அருகே ஏ.செட்டிப்பள்ளி காட்டுப் பகுதிக்கு அந்த யானைகளை விரட்ட முடிவு செய்து, நேற்று மாலை வனத்துறையினர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்