மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.2¼ கோடி வைரம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2¼ கோடி வைரகற்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-08-03 22:58 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து விமானத்தில் பெரும் அளவில் தங்கம், வைரம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது மலேசியாவில் இருந்து வந்து இறங்கிய விமானத்தில் மலேசியாவை சேர்ந்த அஜ்மல்கான் நாகூர்மீரா (வயது48) என்பவர் வந்தார். அவர் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முண்ணுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர்.

மேலும் அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது உள்ளாடைக்குள்ளும், அவர் கொண்டு வந்த குக்கரின் அடிப்பாகத்திலும் மொத்த 55 கவர்களில் வைரத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர்.

அதன் பின்னர், அவரிடம் இருந்து ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள 2,996 காரட் வைரக்கற்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக அஜ்மல்கான் நாகூர் மீராவை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் கோடிக்கணக்கில் வைரங்கள் பிடிப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

மேலும் செய்திகள்