மும்பை, தானே, பால்கரில் கனமழையால் மக்கள் பரிதவிப்பு வெள்ளத்தில் சிக்கி 4 மாணவிகள் பலி

மும்பையில் நேற்று பலத்த மழை பெய்த நிலையில், அதன் பக்கத்து மாவட்டங்களான தானே, பால்கரில் மிக கனமழையால் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

Update: 2019-08-04 00:00 GMT
மும்பை,

மும்பையில் நேற்று பலத்த மழை பெய்த நிலையில், அதன் பக்கத்து மாவட்டங்களான தானே, பால்கரில் மிக கனமழையால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 4 கல்லூரி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கொட்டி தீர்த்தது

மும்பையில் இந்த ஆண்டு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. சில நாட்களாக மிதமாக பெய்து வந்த மழை நேற்று மீண்டும் கொட்டி தீர்த்தது. குறிப்பாக நேற்று காலை முதல் மதியம் வரை கனமழை பெய்தது.

மும்பையில் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் மழை நீர் வடிவதில் சிக்கல் ஏற்படுவது வழக்கம். அந்தவகையில் நேற்று மதிய வேளையில் 4 மீட்டர் உயரத்துக்கும் மேல் கடல் அலை எழுந்தது. இதனால் மும்பை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் வடியாமல் தேங்க தொடங்கியது. பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. சுரங்கப்பாதைகள் மூழ்கின.

போக்குவரத்து பாதிப்பு

மழை வெள்ளம் காரணமாக பல சாலைகளில் பஸ்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

சயான் - குர்லா இடையே தண்டவாளத்தில் வெள்ளம் தேங்கியதால் மத்திய ரெயில்வே வழித்தடத்தில் ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மற்ற வழித்தடங்களிலும் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. மழையினால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு மோனோ ரெயில் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது.

மித்திநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பாந்திரா, கிராந்தி நகர் பகுதி குடிசைப்பகுதி மக்கள் அங்கு இருந்து வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டனர்.

தானே

இதேபோல தானே மாவட்டத்தில் மிக கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. பல பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளின் தரை தளங்கள் வெள்ளத்தில் மூழ்கின. நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மாநகராட்சி பஸ் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

தானே, தர்மவீர்நகரை சேர்ந்த சந்தோஷ் கோலே (வயது18) என்ற வாலிபர் குளிர்சாதனபெட்டியை ஆப் செய்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மும்ராவில் வீட்டின் மேற்கூரை இடிந்து ஒருவர் படுகாயமடைந்தார்.

பால்கர்

பலத்த மழைகாரணமாக பால்கர் மாவட்டமும் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. பால்கர் மாவட்டம் சூர்யா அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த மாவட்டங்களில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

மாணவிகள்

இதற்கிடையே நவிமும்பை நெருல் பகுதியில் எஸ்.ஐ.இ.எஸ். கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் 9 மாணவ-மாணவிகள் நேற்று காலை கார்கர் பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அப்போது அந்த பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது.

இருப்பினும் மாணவ-மாணவிகள் காலை 11 மணியளவில் பான்டவ்காடா மலைப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டு இருந்தனர்.

இந்தநிலையில், மழை காரணமாக திடீரென நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அங்கு குளித்துக்கொண்டிருந்த 4 மாணவிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

உயிரிழந்த பரிதாபம்

இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற மாணவ-மாணவிகள் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 4 மாணவிகளையும் தேடினர்.

இதில் செம்பூர் நாக்கா பகுதியை சேர்ந்த ஸ்நேகா (வயது19) என்ற மாணவி பிணமாக மீட்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, ஸ்வேதா, ஆர்த்தி, நேகா ஆகிய 3 மாணவிகளும் பிணமாக மீட்கப்பட்டனர்.

கார்கருக்கு சுற்றுலா சென்ற இடத்தில் நீர்வீழ்ச்சியில் அடித்து செல்லப்பட்டு 4 மாணவிகள் பலியான சம்பவம் நெருல் கல்லூரி மாணவர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்