தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கக்கூடாது சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கக்கூடாது என சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Update: 2019-08-03 22:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை பெசன்ட் அரங்கத்தில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கண்டித்தும், மருத்துவ கல்வியில் திணிக்கப்படும் நெக்ஸ்ட் தேர்வை எதிர்த்தும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

மருத்துவ கல்வியையும், மருத்துவ சேவையையும் மத்தியஅரசு முழுமையாக வணிகமயமாக்கவும், கார்ப்பரேட்மயமாக்கவும் மாற்ற முயலுகிறது. அதற்கு தடையாக உள்ள இந்திய மருத்துவ கவுன்சிலை ஒழித்துவிட்டு அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்க மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஜனாதிபதி ஒப்புதல்

இந்த மசோதா கூட்டாட்சி கோட்பாடு, மாநில சுயாட்சிக்கு எதிரானது. மருத்துவ கல்வியை சாதாரண ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் படிப்பதை தடுக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டாலும் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகு தான் சட்டமாகும். எனவே மருத்துவ மாணவர்கள், டாக்டர்களின் போராட்டத்தை மதித்து மத்தியஅரசு, இந்த மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெறக்கூடாது.

ஏற்கனவே தமிழகஅரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டசபையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெறவில்லை. அது தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதியோ, அங்கீகாரமோ கொடுக்கப்படவில்லை. அதனால் இது சட்டமாக்கப்படவில்லை.

போராட்டம் தொடரும்

அதேபோல் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் கொடுக்கக்கூடாது. பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு போன்ற ஜனநாயக நிறுவனங்களை ஒழிப்பதற்கு வரைவு தேசிய கல்வி கொள்கை அடிப்படையாக இருக்கிறது. இந்த கொள்கை ஏழை மக்களுக்கு எதிரானது. வரைவு தேசிய கல்வி கொள்கையை மத்தியஅரசு திரும்ப பெற வேண்டும். இதை வலியுறுத்தி எங்களது போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்