காங்கேயத்தில் கொங்கு மக்கள் முன்னணியினர் சென்ற 7 கார்களின் கண்ணாடி உடைப்பு; சாலை மறியல், போலீஸ் குவிப்பு

காங்கேயத்தில் கொங்கு மக்கள் முன்னணியினர் சென்ற 7 கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பதற்றம் நிலவியதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

Update: 2019-08-03 23:15 GMT

காங்கேயம்,

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே பழைய கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையத்தில் தீரன் சின்னமலை நினைவிடம் உள்ளது. அங்கு அவரது நினைவு நாளையொட்டி நேற்று பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், கொங்கு மக்கள் முன்னணியை சேர்ந்தவர்கள் அதன் தலைவர் ஆறுமுகம் தலைமையில் மேலப்பாளையம் சென்று தீரன் சின்னமலை நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த முடிவு செய்து இருந்தனர். இதற்காக அவர்கள் தனித்தனி கார்களில் காங்கேயம் கரூர் ரோடு முத்தூர் பிரிவு அருகே ரோட்டோரம் நின்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக கார்களில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையை சேர்ந்தவர்களும், தனியரசு எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களும் காங்கேயம் நோக்கி வந்தனர்.

அவர்கள் முத்தூர் பிரிவு அருகே ரோட்டோரம் கொங்கு மக்கள் முன்னணியை சேர்ந்தவர்கள் தங்கள் கார்களில் நிற்பதை பார்த்தனர். அப்போது அங்கு அவர்கள் கார்களை நிறுத்தினார்கள். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து திடீரென்று தனியரசு ஆதரவாளர்கள் கார்களில் சென்றவாறே தாங்கள் கொண்டு வந்த உருட்டுக்கட்டை, கற்களால் கொங்கு மக்கள் முன்னணியினரின் கார்களை சேதப்படுத்தினார்கள். திடீரென்று தங்கள் கார்கள் மீது உருட்டுக்கட்டையும், கற்களும் விழுவதை பார்த்த கொங்கு மக்கள் முன்னணியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் தங்கள் கார் கண்ணாடிகளை உடைத்தவர்களை பிடிப்பதற்காக கார்களில் விரட்டி சென்றனர். அதற்குள் அந்த கார்களில் சென்றவர்கள் காங்கேயத்துக்கு சென்று விட்டனர். இதனால் கொங்கு மக்கள் முன்னணியினர் திரும்பி வந்தனர். இந்த கல்வீச்சு, உருட்டுக்கட்டை தாக்குதலில் 7 கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்தன.

இதற்கிடையே இந்த சம்பவத்தை கண்டித்து கோவை–திருச்சி சாலையில் முத்தூர் பிரிவில் கொங்கு மக்கள் முன்னணியினர் நேற்று மதியம் 12.30 மணியளவில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் உட்கார்ந்து கார்களின் கண்ணாடிகளை உடைத்த தனியரசு ஆதரவாளர்களை கைது செய்யக்கோரி கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இது குறித்த தகவல் அறிந்ததும் காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம் தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் அங்கு வந்த திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, மறியலில் ஈடுபட்ட கொங்கு மக்கள் முன்னணி தலைவர் ஆறுமுகம் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் தங்கள் கார்கள் மீது கற்களையும், உருட்டுக்கட்டைகளையும் வீசி தாக்குதல் நடத்திய தனியரசு ஆதரவாளர்களை கைது செய்யக்கோரி புகார் மனு கொடுத்தனர். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்