தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்த 4,213 தொழிலாளர்களுக்கு ரூ.1½ கோடி நிதி உதவி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்த 4,213 தொழிலாளர்களுக்கு 4 மாதங்களில் ரூ. 1½ கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
இது குறித்து கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகேசன் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையின் கீழ் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்து அதில் கொத்தனார், பெயிண்டர், எலக்ட்ரீசியன், தச்சர் உள்ளிட்ட 53 வகையான தொழில் செய்யும் தொழிலாளர்கள், உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு 16 நலவாரியங்கள் அமைத்து அதில் தையல், கைவினை, மண்பாண்டம் உள்ளிட்ட 60 வகையான தொழில் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் டிரைவர் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 18 வயது முதல் 60 வயதிற்குட்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் மேற்படி தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்.
தொழிலாளர் நல வாரியங்களின் மூலம் உறுப்பினராக உள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்களுக்கு கல்வி, மகப்பேறு, திருமணம், ஓய்வூதியம், கண்கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. 2019-20-ம் நிதியாண்டில் (கடந்த நான்கு மாதங்களில்) மாவட்டத்தில் மொத்தம் 4,213 தொழிலாளர்களுக்கு நிதியுதவியாக ரூ. 1 கோடியே 57 லட்சத்து 95 ஆயிரத்து 884 வழங்கப்பட்டுள்ளது. இது தவிர உறுப்பினர்களாக பதிவு செய்து 60 வயது முடிவுற்ற 1,843 தொழிலாளர்கள் மாதம் ரூ. ஆயிரம் வீதம் ஓய்வூதியமாக பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் அரசு நலத்திட்ட உதவிகளை பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
எனவே, கட்டுமானம், அமைப்புசாரா மற்றும் ஓட்டுனர் தொழிலாளர்கள் அதிக அளவு உறுப்பினராக சேர்ந்து அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.