திருப்பரங்குன்றம் லாட்ஜில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை - தாய்-சகோதரர் இறந்ததால் விரக்தி

சிதம்பரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் திருப்பரங்குன்றம் லாட்ஜில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தாயார், சகோதரர் தற்கொலை செய்ததால் விரக்தியடைந்து இந்த முடிவை எடுத்துள்ளார்.

Update: 2019-08-03 00:00 GMT
திருப்பரங்குன்றம்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் காரியபெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் கணேசன். இவருடைய மனைவி ஆண்டாள். இவர்களது மகன் ராஜ்குமார்(வயது 26), ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் வந்தார். பின்னர் அவர் சாமி கும்பிட வந்ததாக கூறி திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் கோவில் எதிரே உள்ள தனியார் லாட்ஜில் தங்கினார்.

இந்தநிலையில் ராஜ்குமார் நேற்று காலை வெளியே சென்றுவிட்டு மீண்டும் லாட்ஜில் வந்து தங்கினார். இதையடுத்து மதியம் 2 மணி வரை ராஜ்குமார் தங்கியிருந்த அறை திறக்கப்படவில்லை. அவர் அறையை விட்டு வெளியேவும் செல்லவில்லை. இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் அவர் தங்கிய அறையின் கதவை லாட்ஜ் உரிமையாளர் தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. தொடர்ந்து பலமுறை கதவை தட்டியும் திறக்கப்படாததால் உடனடியாக லாட்ஜ் உரிமையாளர், திருப்பரங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது ராஜ்குமார் அறையின் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சிதம்பரத்தை சேர்ந்தவர் ஏன் இங்கு வந்து தற்கொலை செய்ய வேண்டும் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர். அப்போது கடன் பிரச்சினை மற்றும் ராஜ்குமார் காதல் திருமணம் செய்ததால் அவரது தாயார், சகோதரர் தற்கொலை செய்து கொண்டதால், அவரும் இந்த முடிவை எடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் சிதம்பரத்தில் தங்கியிருந்து, அதே பகுதியில் உள்ள கல்லூரியில் படித்தார். அந்த மாணவியை ராஜ்குமார் தனது ஆட்டோவில் ஏற்றி தினமும் கல்லூரிக்கு விட்டு வருவாராம். நாளடைவில் அவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியது. பின்னர் 2 பேரும் தங்களது பெற்றோருக்கு தெரியாமல் சிதம்பரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ராஜ்குமார் திருமணம் செய்து கொண்ட விவகாரம் ராஜ்குமாரின் தாயார் ஆண்டாள் மற்றும் அவரது அண்ணன் செந்தில்குமார் ஆகியோருக்கு தெரியவந்தது. ஏற்கனவே கடன் பிரச்சினையில் குடும்பம் சிக்கி தவிக்கும் நிலையில், ராஜ் குமார் திருமணம் செய்து கொண்டது அவர்களது மனதை புண்படுத்தியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஆண்டாளும், செந்தில்குமாரும் தற்கொலை செய்து கொண்டனர்.

இதனை அறிந்த ராஜ்குமார் தனது காதல் மனைவியை, மதுரையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு திருப்பரங்குன்றம் லாட்ஜில் தங்கினார். இந்தநிலையில் தான் தனது தாயார், சகோதரர் தற்கொலை செய்ததால் விரக்தி அடைந்து இந்த முடிவை ராஜ்குமார் எடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்