ஓட்டப்பிடாரம் அருகே கன்டெய்னர் லாரி மோதி தானாதிபதி தோரணவாயில் சேதம்
ஓட்டப்பிடாரம் அருகே கன்டெய்னர் லாரி மோதியதில் தானாதிபதி தோரணவாயில் சேதம் அடைந்தது.
ஓட்டப்பிடாரம்,
ஓட்டப்பிடாரம் அருகே கன்டெய்னர் லாரி மோதியதில் தானாதிபதி தோரணவாயில் சேதம் அடைந்தது.
தோரணவாயில்
ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை உள்ளது. இந்த கோட்டைக்கு செல்லும் வழியில் ஓட்டப்பிடாரத்தில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி வரை வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமத்துரை, வெள்ளையத்தேவன், தானாதிபதி, வீரன் சுந்தரலிங்கம் தோரண வாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல லட்சம் செலவில் தோரணவாயில்கள் உள்பட வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை மறுசீரமைப்பு பணிகள் நடந்தன.
லாரி மோதியது
நேற்று மாலையில் ஓட்டப்பிடாரத்தில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி வழியாக குறுக்குசாலைக்கு ஒரு கன்டெய்னர் லாரி சென்றது.
அந்த லாரி வீரபாண்டிய கட்டபொம்மன் தோரணவாயில், ஊமத்துரை, வெள்ளையத்தேவன் தோரணவாயில்களை கடந்து சென்றது. தொடர்ந்து தானாதிபதி தோரணவாயிலை கடக்க முயன்ற போது லாரியின் கன்டெய்னர் மேல் பகுதி தோரணவாயிலில் மோதியது. இதில் தோரணவாயில் சேதமடைந்து இடிந்து லாரியின் மீது விழுந்தது. இதில் லாரி டிரைவர் லேசான காயம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கட்டிட இடிபாடுகள் மற்றும் லாரியை அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து வீரசக்கதேவி ஆலய குழுத்தலைவர் முருகபூபதி கூறும் போது தோரண வாயிலை அரசு உடனடியாக புதிதாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.