கருங்கல் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய 8 வீடுகள் அகற்றம்

கருங்கல் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய 8 வீடுகளை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இடித்து அகற்றினர்.

Update: 2019-08-02 21:45 GMT
கருங்கல், 

கருங்கல் அருகே கீழ் மிடாலம் ‘பி‘ கிராமத்தில் பொன்பாறைகுளமும் அதனைச் சுற்றி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலமும் உள்ளது. இந்த அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி இருந்தனர். சமீபத்தில் தமிழக அரசு நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடங்களை அகற்ற உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

குமரி மாவட்டத்திலும் பொதுப்பணித்துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் கீழ் மிடாலம் பகுதியில் உள்ள பொன்பாறைகுளத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளை அகற்றும் படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலமுறை நோட்டீசு அனுப்பி இருந்தனர். ஆனால், அந்த வீடுகளில் உள்ளவர்கள் வெளியேற மறுத்து விட்டனர்.

இந்தநிலையில் நேற்று காலை 11.30 மணியளவில் கிள்ளியூர் தாசில்தார் கோலப்பன் தலைமையில் அதிகாரிகள் பொன்பாறைகுளம் பகுதிக்கு பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் பொதுப்பணித்துறை நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய 8 வீடுகளை அகற்ற வந்தனர். அப்போது, அந்த வீடுகளில் வசித்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். அதற்கு மாற்று இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதைத்தொடர்ந்து அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பின்னர், பொக்லைன் எந்திரத்தை கொண்டு 8 வீடுகள் இடித்து அகற்றும் பணி நடைபெற்றது. இந்த பணியின் போது கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்தேவி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்