கலெக்டர்கள் மாநாடு: அதிகாரிகளுக்கு எடியூரப்பா எச்சரிக்கை “மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் அலட்சியமாக இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை”

பெங்களூரு விதான சவுதாவில் நேற்று கலெக்டர்கள் மாநாடு நடந்தது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா பேசுகையில், மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் அலட்சியமாக இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2019-08-02 23:30 GMT
பெங்களூரு, 

பெங்களூரு விதான சவுதாவில் நேற்று கலெக்டர்கள் மாநாடு நடந்தது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா பேசுகையில், மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் அலட்சியமாக இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

கர்நாடக அரசு சார்பில் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு பெங்களூரு விதான சவுதாவில் உள்ள மாநாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

எடியூரப்பா பேச்சு

முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உயர் அதிகாரிகள், கலெக்டர்கள், மண்டல கமிஷனர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-

பொதுமக்கள் சிறிய பிரச்சினைகளுக்காக பெங்களூரு வந்து என்னிடமோ அல்லது மந்திரிகளிடமோ முறையிடும் நிலை உள்ளது. அதனால் மக்களின் பிரச்சினைகளுக்கு மாவட்ட அளிவிலேயே தீர்வு காண வேண்டும். இதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். சிறப்பாக செயல்படும் அதிகாரிகளுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன். எம்.எல்.ஏ.க்கள் உங்களை பற்றி புகார் செய்தால் அதை கண்டுகொள்ள மாட்டேன்.

ஒழுங்கு நடவடிக்கை

ஆனால் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது இல்லை என்று புகார் வந்தால் அதை எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அலட்சியம் காட்டினால் அத்தகைய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் மற்றும் நீங்கள் மக்களின் வரிப்பணத்தில் பிழைக்கிறோம். அவர்களின் பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் நாம் இருந்தும் எந்த பயனும் இல்லை.

அரசு துறை செயலாளர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து திட்ட பணிகள் சரியான முறையில் அமல்படுத்தப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இதுபற்றி நான் மாதந்தோறும் விவரங்களை கேட்டு பெறுவேன். இந்த விஷயத்தில் சமரசம் செய்துகொள்ளமாட்டேன்.

கடும் வறட்சி

கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்த அரசியல் குழப்பம் காரணமாக வளர்ச்சி பணிகள் முடங்கிவிட்டன. இதை சரிசெய்யும் பொறுப்பு நமக்கு உள்ளது. அதிகாரிகள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இவற்றை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக வேண்டும். பிரச்சினைகள் என்ன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் அதை தீர்க்க முடியும்.

நீங்கள் திடீரென கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். அப்போது உங்களுக்கு கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரியவரும். சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வர வேண்டும். மாலை 5 மணி வரை அலுவலகத்தில் இருக்க வேண்டும். அப்போது தான் மற்ற அதிகாரிகளும் சரியான முறையில் பணியாற்றுவார்கள். கோப்புகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அணைகளில் நீர் இருப்பு குறைவு

மாநிலத்தில் 42 சதவீத மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அணைகளில் நீர்இருப்பு குறைவாக உள்ளது. 105 தாலுகாக்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. கடந்த முறையை காட்டிலும் வறட்சி இந்த ஆண்டு தீவிரமாக இருக்கிறது. மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் வழங்க வேண்டும். வேலை தேடி மக்கள் வெளியூர் செல்வதை தடுக்க வேண்டும். அவர்களுக்கு கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்க வேண்டும்.

3,067 கிராமங்களுக்கு இப்போதும் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் இருந்தே வறட்சி எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். இது அரசின் முதல் முன்னுரிமை ஆகும். தண்ணீர் பற்றாக்குறையால் 70 சதவீத பாதுகாக்கப்பட்ட குடிநீர் மையங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளன.

நிதி பற்றாக்குறை

சில அதிகாரிகள் சட்ட சிக்கலை காரணம் காட்டி அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு வழங்காமல் இருப்பது எனது கவனத்திற்கு வந்துள்ளது. தொழிலாளர்கள், தலித், பழங்குடியின மக்கள் மற்றும் ஏழைகள், பரம ஏழைகளுக்கு திட்டங்கள் போய் சேர வேண்டும். திட்டத்தின் பயன்கள் கிடைக்காமல் அவர்கள் பாதிக்கப்படக்கூடாது. நிதி பற்றாக்குறை இருந்தால் தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதுங்கள். அவர் நிதி ஒதுக்கீட்டிற்கு நடவடிக்கை எடுப்பார்.

வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களின் வங்கி கணக்கில் ரூ.618 கோடி இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் நெருக்கடியான நிலை ஏற்படும்போது அவசர பணிகளுக்கு ரூ.422 கோடி இருக்கிறது. மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நிதி பற்றாக்குறை இல்லை. ஆனால் உங்களுக்கு ஈடுபாட்டுடன் செயல்படும் உணர்வு இருக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு நிதி உதவி

பயிர் காப்பீட்டு திட்டத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசின் ‘கிசான் சம்மான்‘ திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. அதே போல் மாநில அரசும் ஆண்டுக்கு ரூ.4,000 வழங்க முடிவு செய்து அறிவித்துள்ளது. இது விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

கலெக்டர்கள் மாதத்திற்கு ஒரு முறை அரசு விடுதிகளுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குளியல் அறை, கழிவறை சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். கங்கா கல்யாண் திட்டத்தில் தோண்டப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளுக்கு மின் இணைப்பு வசதியை செய்துதர வேண்டும். இதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சமூக நலத்திட்டங்களின் பயன்கள் உரிய பயனாளிகளுக்கு போய் சேருவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இறந்தவர்களின் பெயர்களை பயனாளிகளின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். மக்களுடன் அரசு இருக்கிறது என்ற மனநிலையை அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இதில் கர்நாடக அரசின் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், முதல்-மந்திரியின் ஆலோசகர் லட்சுமி நாராயணா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்