கடன் சுமையை குறைக்க பெஸ்ட் நிர்வாகத்துக்கு ரூ.1,200 கோடி நிதி உதவி மாநகராட்சி முடிவு
கடன் சுமையை குறைக்க பெஸ்ட் நிர்வாகத்துக்கு ரூ.1,200 கோடி நிதி உதவி அளிக்க மும்பை மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.
மும்பை,
கடன் சுமையை குறைக்க பெஸ்ட் நிர்வாகத்துக்கு ரூ.1,200 கோடி நிதி உதவி அளிக்க மும்பை மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.
ரூ.1,200 கோடி உதவி
மும்பையில் மாநகராட்சியின் கீழ் செயல்படும் பெஸ்ட் நிர்வாகம் பஸ்களை இயக்கி வருகிறது. நஷ்டத்தில் இயங்கி வரும் பெஸ்ட் நிர்வாகத்துக்கு மாதம் ரூ.100 கோடி நிதிஅளிக்க மாநகராட்சி முன் வந்தது. மேலும் பெஸ்ட் பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும், அதிக சேவைகளை இயக்க வேண்டும் என நிபந்தனை விதித்தது. இதையடுத்து பெஸ்ட் கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டது. இந்தநிலையில் பெஸ்ட் கடன் சுமையை குறைக்க ரூ.1,200 கோடி நிதி உதவி அளிக்க மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.
வரவேற்பு
இதுகுறித்து மும்பை மாநகராட்சி கமிஷனர் பிரவின் பர்தேசி கூறியதாவது:-
பெஸ்ட் நிர்வாகம் வாங்கிய கடனுக்காக ஆண்டுக்கு ரூ.200 கோடி வட்டி கொடுத்து வருகிறது. எனவே ரூ.1,200 கோடி கொடுத்து அந்த கடனை அடைக்க முடிவு செய்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த திட்டம் விரைவில் மாநகராட்சி நிலைக்குழு ஒப்புதலுக்கு வர உள்ளது. பெஸ்ட் கடனை அடைக்க முன்வந்துள்ள மாநகராட்சியின் முடிவுக்கு மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ரவி ராஜா வரவேற்பு தெரிவித்து உள்ளார்.