நண்பர் வீட்டின் முன்பு அழகுநிலைய பெண் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

பெரம்பூரில் தொழிலில் நண்பர் பணமோசடி செய்ததால், அவரின் வீட்டு முன்பு அழகுநிலைய பெண் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-08-01 23:00 GMT
பெரம்பூர்,

சென்னை வண்ணாரப்பேட்டை சிமெண்ட் ரோட்டை சேர்ந்த சேகரின் மனைவி அமிர்தவள்ளி (வயது 40). இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகாவைச் சேர்ந்த செந்தில் (40) என்பவருடன் சேர்ந்து கொண்டு முதலீடு செய்து ஆழ்வார் பேட்டை டி.டி.கே. சாலையில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்தார். தொழில் நண்பரான செந்தில் பெரம்பூர் ஆறுமுகம் தெருவில் ஒரு வருடமாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார்.

இந்த நிலையில் அழகு நிலையம் நடத்துவதற்கு உரிமம் பெறுவதற்காக அமிர்தவள்ளி, செந்திலிடம் பணம் கொடுத்ததாக தெரிகிறது. அதன்பின்னர், அழகு நிலையத்திற்கு முறையான உரிமத்தை செந்தில் வாங்கி தராமல் அமிர்தவள்ளியை தொடர்ந்து ஏமாற்றி பண மோசடி செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் அமிர்தவள்ளி உரிமம் வாங்காததால், அழகுநிலையத்தை தொடர்ந்து நடத்த முடியாமல் மூடினார். இதனால் அவருக்கு பண நஷ்டம் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் அமிர்தவள்ளி செந்திலின் வீட்டுக்கு சென்று, கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் செந்தில் பணம் இல்லை என்று கூறி மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து, மனமுடைந்த அவர், செந்தில் வீட்டின் வளாகத்தில் நைலான் கயிறால் ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிறிது நேரத்திற்கு பிறகு வெளிவந்து பார்த்தபோது, அமிர்தவள்ளி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செந்தில் செம்பியம் போலீசில் தகவல் தந்தார்.

அதன்பேரில், செம்பியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அமிர்தவல்லி சடலத்தை மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு தூண்டியதாக செந்தில் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்